பொன்முடிக்கு சம்மன்

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பாக பா.ஜ. கவுன்சிலர் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு மார்ச் 23 ம் தேதி நேரில் ஆஜராகும்படி, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.சென்னையில் 2025 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதுசம்பந்தமாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த புகார் மனு, எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.இந்த புகார் மனுவை விசாரித்த நீதிபதி சவுந்திர பாண்டியன், புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு முகாந்திரம் உள்ளதாகக் கூறி, மார்ச் 24 ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.