திடீரென உயர்ந்த மின்சார கட்டணம் – அதிகாரிகள் விளக்கம்.!!

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளில் இந்த மாத மின்சார கட்டணம் அதிகரித்து இருப்பதாக குற்றம்சாட்டி வருகிறார்கள்.

அதேபோல் தமிழ்நாடு முழுவதுமே பலர் தங்களுக்கு இந்த மாதமும் கடந்த மாதமும் மின் கட்டண விகிதம் கடுமையாக அதிகரித்திருப்பதாக கூறிவருகிறார்கள். எனினும் தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் திடீரென உயர்ந்தது ஏன் என்பது குறித்து சந்தேகத்திற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். உண்மையில் மின் கட்டணம் உயரவில்லை. மாறாக மின் கணக்கீடு எடுப்பதில் ஏற்பட்ட தாமதமே காரணம் என்று கூறப்படுகிறது.

மின் கட்டணத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் குறைவான சதவீதம் மக்கள் கட்டும் மின் கட்டணத்தை வைத்து தான் பெரும்பாலான மக்களுக்கு மானியம் அளிக்கப்படுகிறது. மின் கட்டணத்தை பொறுத்தவரை 100 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை..அவர்களுக்கு கட்டணமே வராது. அதேபோல் 200 யூனிட் வரை வருபவர்களுக்கும் பெரிய அளவில் கட்டணம் இருக்காது. ஆனால் 300 யூனிட் அல்லது அதற்கு மேல் போகும் போது கணிசமாக கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கிறது.

500ஐ தாண்டினால் அவ்வளவு தான்.. மின் கட்டணம் மிக அதிக அளவில் இருக்கும். அதாவது எப்படி மின் கட்டணம் மாறும் என்றால், ஆயிரம் ரூபாய் கூட வராத வீடுகளுக்கு மின் கட்டணம் 2500 ரூபாய் வரை உயர்ந்துவிடும். 500 யூனிட்டிற்கு மேல் ஏறும் ஒவ்வொரு யூனிட்டுமே ரூ.8.80- ஆக உள்ளது தான் காரணம், இந்த பிரச்சனையை தீர்க்கவே மாதம் மாதம் மின் கட்டணம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஆனால் நடைமுறையில் 60 நாளுக்கு ஒரு முறை தான் மின் கட்டண ரீடிங் எடுக்கப்படுகிறது. சில பகுதிகளில் 60 நாளில் எடுக்க வேண்டிய ரீடிங் 5 நாள் தள்ளி போகும் போது, மின் கட்டணம் கடுமையாக உயர்ந்துவிடுகிறது. இதுதான் தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

ஏனெனில் தமிழ்நாட்டில் மின்சார வாரியம் ஆண்டுக்கு ஒருமுறை தான் மின் கட்டணத்தை உயர்த்தி வருகிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மின் கட்டணத்தை உயர்த்தவில்லை.. அதேநேரம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியது. ஏழைகளை மின் கட்டண உயர்வு பாதிக்காது என்றாலும், நடுத்தர வர்க்கத்தினரை இந்த மின் கட்டண உயர்வு கடுமையாக பாதித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டதாக பொதுமக்கள் கடந்த சில நாட்களாக குற்றம்சாட்டி வருகிறார்கள். குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளில் இந்த மாத மின்சார கட்டணம் அதிகரித்து இருப்பதாக மின்வாரிய அதிகாரிகளிடம் நேரில் சென்று புகார் அளித்து வருகிறார்கள். தீபாவளி பண்டிகை காலத்தில் மின்சார கட்டண உயர்வு மக்களை வெகுவாக பாதித்து உள்ளதாக குற்றம்சாட்டி வருகிறார்கள்.

பொதுவாக மின்சார கட்டணம் கணக்கீடு செய்ய வருபவர்கள் சரியான நேரத்தில் வந்து கணக்கீடு செய்யாத காரணத்தால், 500 யூனிட்டுக்கு கீழே பயன்பாடு உள்ளவர்களுக்கு அதனை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் மக்கள், 500 யூனிட்டுக்கு மேல் பயன்பாடு இருந்தால் மின்சார கட்டணம் கடுமையாக உயர்கிறது என்றும், இதனை அரசு முறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறுகையில், வீட்டு நுகர்வு மின்சாரத்திற்கான கட்டணத்தை அரசு உயர்த்தவே இல்லை. அதேநேரம், அனைவருக்கும் வழங்கப்படும் இலவச மின்சார சலுகையும் தொடர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் கட்டண உயர்வு குறித்து எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்கவில்லை. எனவே பொதுமக்கள் கூறுவதுபோல் மின்சார கட்டணம் இதுவரை உயரவில்லை.

எனினும் பல இடங்களில் மின்சார கட்டணம் கணக்கீடு செய்யும் பணி முறையாக நடக்கவில்லை, பிரச்சினை இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்துள்ளது. காலம் கடந்து மின்சார கணக்கீடு செய்யும்போது மின்சார கட்டணமும் உயர வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக 60 நாட்களுக்கு 400 யூனிட் வரை ரூ.4.95 கட்டணமும், 401 முதல் 500 யூனிட் வரை ரூ.6.65-ம், 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை ரூ.8.80-ம், 601 யூனிட் முதல் 800 யூனிட் வரை ரூ.9.95-ம், 801 யூனிட் முதல் 1,000 யூனிட் வரை ரூ.11.05-ம், 1,000 யூனிட்டுக்கு மேல் ரூ.12.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வரும் காலங்களில் மின்சார கட்டணம் கணக்கீடு முறையாக எடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று கூறினார்கள்.