இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள காஷ்மீர் பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் நேற்று இரவிலிருந்து இருநாட்டு ராணுவத்திற்கு இடையே தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எல்லையிலுள்ள மக்களை பாதுகாப்பதில் அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு மாநில அரசும் முழுவீச்சில் உதவி செய்து வருகிறது. பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் சிறப்பை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும், விளக்குகளை அனைத்துவிட்டு வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
“அனைத்து மக்களும் வீட்டுக்குள்ளே இருங்கள், முடிந்தவரை ஜன்னல் பகுதிகளில் இருந்து விலகி இருங்கள், வீட்டில் விளக்குகளை அனைத்து வையுங்கள், ஜன்னல் பகுதியை திரை சீலைகளை கொண்டு மூடி வையுங்கள்” என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதனால் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும், இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல சைரன் ஒலிக்கும் என்றும், என்ன நடக்கிறது என்ற செய்திகள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும் என்றும் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
“இது போன்ற சமயத்தில் மக்களின் ஒத்துழைப்பு முக்கியமானது. நமது ராணுவம் நம்மை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாம் இப்படி செய்வதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிக்க முடியும். யாரும் பயப்பட வேண்டாம்” என்று அந்த பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எல்லை பகுதிகளில் உச்சகட்ட பாதுகாப்பு பணிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு பாகிஸ்தானில் மூன்று போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. அதே போல ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் அரசு தாக்குதல் நடத்தியது, அதனையும் இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள இந்தியாவின் ராணுவ தளங்களை பாகிஸ்தான் தாக்க முயன்று உள்ளது. அதனையும் இந்திய ராணுவம் வேகமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தி உள்ளது. தற்போது வரை பெரிதாக உயிரிழப்புகள் ஏற்படாத நிலையில் பாதுகாப்பான நடவடிக்கைகளை ராணுவம் மேற்கொண்டு வருகிறது. அதே போல பாகிஸ்தானில் உள்ள முக்கிய பகுதிகளை இந்திய ராணுவம் டார்கெட் செய்துள்ளது. அங்குள்ள முக்கிய துறைமுகங்களை இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது..