அடுத்த 5 நாட்களில் தென்மேற்கு பருமழை தொடங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை: தென்மேற்கு பருமழை அடுத்த 5 நாட்களில் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மழைப் பொழிவுடன் தொடங்கிய கத்தரி வெயில் பின்னர் சுட்டெரிக்க தொடங்கியது. இதற்கிடையே, கடந்த 16-ந்தேதி முதல் லேசான மழைப் பொழிவு காணப்பட்டது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைபெய்து வெப்பத்தை தணித்தது. சில மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.

அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 12 சென்டிமீட்டரும், அரக்கோணம், சேலம், தர்மபுரி, தேன்கனிக்கோட்டையில் தலா 6 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை 27-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே அடுத்த 5 நாட்களில் அதாவது 25-ந்தேதிக்குள் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; கேரளாவில் தென்மேற்கு பருவமழை அடுத்த 4 அல்லது 5 நாட்களில் தொடங்க வாய்ப்புள்ளது. இது தமிழகத்தின் சில பகுதிகளில் பரவும். இதேபோல, மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா, வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மேலும், கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடலில் இன்று (மே.21) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது நாளை காற்றத்தழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும். பின்னர் இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக் கூடும். இதனால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.