விண்ணை முட்டும் மளிகை பொருட்களின் விலை… இனி நடுத்தர மக்களால் இங்கு வாழவே முடியாது..!!

மெரிக்காவில் கடந்த சில வாரங்களாக மளிகை பொருட்களின் விலைகள் மீண்டும் விண்ணை முட்டுகின்றன, இது டொனால்ட் டிரம்ப்பிற்கு ஒரு புதிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு அரசியல் தந்திரம் என்று ஒதுக்கிவிட முடியாது; இது ஒரு யதார்த்தமான பிரச்சனை. கடந்த சில வாரங்களாக, ஒரு நெருக்கடிக்கு பின் மற்றொரு நெருக்கடி என பல நிகழ்வுகள் நடந்ததால், மளிகை பொருட்களின் விலை உயர்வு பற்றி அதிகம் பேசப்படவில்லை. ஆனால், விலைவாசி மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது.

தொழிலாளர் புள்ளிவிவர பணியகத்தின் புதிய தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் உணவுப் பொருட்களின் விலை 0.6% அதிகரித்துள்ளது. “0.6% என்பது சிறியதுதானே?” என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இது 2022க்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய மாத அதிகரிப்பு ஆகும்.

பைடன் அதிபராக இருந்தபோது, “உயர்ந்த மளிகை பொருட்களின் விலைகளால் குடும்பங்கள் சிரமப்படுகின்றன” என்று டிரம்ப் குற்றம் சாட்டினார். அப்போது, “நான் ஆட்சிக்கு வந்தால், மளிகை பொருட்களின் விலையைக் குறைப்பேன்” என்றும், மற்ற நாடுகள் மீது விதிக்கப்படும் வரிவிதிப்பு கட்டணங்கள் அமெரிக்க குடும்பங்களுக்கான செலவுகளை குறைக்கும்” என்றும் வாக்குறுதி அளித்தார். அப்போதே எந்தவொரு பொருளாதார நிபுணரும் இது நடக்காது என்று எச்சரித்தனர். அவர்கள் எச்சரித்தவாறு டிரம்ப் சொன்னதற்கு எதிர்மறையாக நிகழ்ந்து வருகிறது.

டிரம்பின் பொருளாதார கொள்கைகளால், அமெரிக்க மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. பணக்காரர்களுக்கு இந்த விலையுயர்வு ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு இந்த விலைவாசி உயர்வு தங்கள் மாத பட்ஜெட்டில் நெருக்கடியை ஏற்படுத்தும். கடந்த சில வாரங்களில் மட்டும் உயர்ந்த உணவுப்பொருட்கள் விலையுயர்வு குறித்த தகவல்கள் இதோ:

காபி – 26% உயர்வு

மாட்டிறைச்சி – 14% உயர்வு

ஆரஞ்சு – 17% உயர்வு

வாழைப்பழம் – 6% உயர்வு

கோழி – 6% உயர்வு

சாக்லேட் சிப் குக்கீ – 5% உயர்வு

சிப்ஸ் – 4% உயர்வு

பால் – 4% உயர்வு

விலைவாசி உயர்வு 4% முதல் 26% வரை உயர்ந்துள்ள நிலையில், ஊதியம் வெறும் 2% மட்டுமே உயர்ந்துள்ளது. இது, ‘டிரம்ப் நிர்வாகத்தின் தோல்வியை வெட்டவெளிச்சமாக காட்டுகிறது.

கட்டணங்கள், உரங்கள், விவசாய இயந்திரங்கள், போக்குவரத்து ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளன. இந்தச் செலவு அதிகரிப்பு அனைத்தும் மளிகைப் பொருட்களின் விலையில் எதிரொலித்தன.

டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளை நினைவுபடுத்துவது அவசியம். அவர் கூறிய முக்கிய வாக்குறுதிகள்:

“பணவீக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, அமெரிக்காவை மீண்டும் மலிவானதாக மாற்றுவோம்.”

“விலைகளை குறைப்போம். அவற்றை நாம் குறைக்க வேண்டும். விலை மிகவும் அதிகமாக உள்ளது.”

“விலைகள் குறையும். நீங்கள் பாருங்கள். அவை விரைவாக குறையும்.”

“நாளை நான் பணவீக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவேன். உங்கள் வரிகளை குறைப்போம். விலைகளை குறைப்போம்.”

இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேறவில்லை. “அதிபர் ஒருவரால் மளிகைப் பொருட்களின் விலையை எவ்வளவுதான் கட்டுப்படுத்த முடியும்?” என்று சிலர் கேட்கலாம். ஆனால், டிரம்ப் யதார்த்தமான வாக்குறுதிகளை அளிக்கவில்லை. “மளிகை விலை குறையும், முதல் நாளிலேயே எல்லாம் குறையும்” என்று அவர் நம்மூர் அரசியல்வாதிகள் போல் பொய்யான உறுதிமொழியை அளித்தார்.

டிரம்பின் மலிவான மளிகைப் பொருட்கள் குறித்த வாக்குறுதி, அவரது மிகவும் வெளிப்படையான பொருளாதார தோல்விகளில் ஒன்றாக மாறியுள்ளது. எப்போதும்போல, தனது தோல்விகளுக்கு அவர் மற்றவர்களை குற்றம் சாட்டுவார். ஆனால், உண்மை என்னவென்றால், அவர் கொடுத்த வாக்குறுதிகள் பொய்யானவை என்பதை மக்கள் இப்போது நன்றாக புரிந்து கொண்டனர். இவரது ஆட்சி எப்போது முடியும்? எப்போது டிரம்பிடம் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கும் என அமெரிக்க நடுத்தர மக்கள் புலம்ப தொடங்கிவிட்டனர். இந்த புலம்பல் புரட்சியாக வெடிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது.