ஐயா நல்லகண்ணு மறைவு…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.. முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லக்கண்ணு பிற்பகல் 1.55 மணியளவில் காலமானார்..  நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பாகும்..

நல்லகண்ணு மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.தமிழக முதல்வர் மற்றும் முக்கியத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அடித்தட்டு மக்கள், ஒடுக்கப்பட்டோர், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக செயல்பட்டதற்காகவும், குரல் கொடுத்ததற்காகவும் நல்லகண்ணு எப்போதும் நினைவுகூரப்படுவார். சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களாலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு. குறிப்பாக எளிமையான வாழ்க்கைக்காக அனைவராலும் போற்றப்பட்டவர்’ எனத் தெரிவித்துள்ளார்.

நல்லகண்ணுவின் மறைவுக்கு துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பொதுவாழ்வில் சிறிதும் தன்னலம் கருதாமல் சமூகத்துக்காக மட்டுமே வாழ்ந்த மகத்தான தலைவரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய பொது உடைமை இயக்கத்தின் முன்னோடியுமான மதிப்புக்குரிய நல்லக்கண்ணுவின் மறைவுச் செய்தி செய்தியறிந்து ஆறாத் துயரமடைந்தேன்.

தொழிலாளர் உரிமைகள், சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காக தமது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த போராளி நல்லக்கண்ணு, எளிமை, நேர்மை , தியாகம் மற்றும் கொள்கை உறுதி ஆகியவற்றால் அனைவராலும் போற்றப்பட்ட பெருந்தகை.

அவரது மறைவு பொதுவாழ்வுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவர்தம் பிரிவால் வாடும் குடும்பத்தினர்கள், இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தோழர்கள், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தியாகங்கள் நிறைந்த போராட்ட வாழ்வு மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு சார்பில் நல்லகண்ணு மறைவுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்., துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் இடதுசாரி இயக்கங்களின் முக்கிய நிர்வாகிகள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயனார் நாகேந்திரன் மற்றும் மத்திய இணையமைச்சர் எல். முருகன் ஆகியோர் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் ஐயாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நல்லகண்ணு மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அதே போல் கட்சி பாகுபாடின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

அந்த வகையில் தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா இரா.நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன். அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த தோழர், அய்யா இரா. நல்லகண்ணு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ” மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள்.” என்று தெரிவித்துள்ளார்..