பாஜகவுக்கு தாவும் சசி தரூர்… காங்கிரஸ் கட்சிக்கு ஷாக் கொடுத்த மோடி.!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர், பாஜகவில் இணைவதற்கான சமிக்ஞைகள் தெரிய தொடங்கி இருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாகவே, அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த சூழலில், கேரளாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் சசி தரூர் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியில், இதை வைத்து பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கலாய்த்த சம்பவம் அக்கட்சிக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, பல்வேறு கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள், பாஜகவில் இணைவது அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். மத்திய பிரதேச காங்கிரஸ் முகமாக இருந்து வந்த ஜோதிராதித்ய சிந்தியா, கடந்த 2020ஆம் ஆண்டு, பாஜகவில் இணைந்தார். தற்போது அவர் மத்திய அமைச்சராக உள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட ஜிதின் பிரசாதா, கடந்த 2021ஆம் ஆண்டு, பாஜகவில் இணைந்தார். தற்போது அவர் மத்திய இணைச்சராக உள்ளார். அமரீந்தர் சிங், அனில் ஆண்டனி என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தற்போது அந்த பட்டியலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான சசி தரூர் இணைய உள்ளதாக கடந்த சில ஆண்டுகளாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், சசி தரூர், பாஜகவில் இணைவதற்கான சமிக்ஞைகள் தெரிய தொடங்கி இருக்கின்றன. விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று கேரள மாநிலம் வந்துள்ளார். அவரை நேரடியாக வரவேற்பதற்காக திருவனந்தப்புரம் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார் சசி தரூர். இதற்காக, டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தப்புரம் வந்துள்ளார் சசி தரூர். மோடியை சசி தரூர் வரவேற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் திறப்பு விழாவிலேயே சசி தரூர் பெயரை குறிப்பிட்டு பேசியுள்ளார் பிரதமர் மோடி. சசி தரூரை வைத்து காங்கிரஸ் கட்சியை கலாய்த்த அவர், “இன்று, சசி தரூர் அமர்ந்திருக்கிறார். இன்றைய நிகழ்ச்சி சிலரின் தூக்கத்தைக் கெடுக்கும். செய்தி எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்றுவிட்டது” என்றார்.

இது, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே, கேரள காங்கிரஸ் தலைவர்கள் மீது சசி தரூர் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. கேரள காங்கிரஸில் வெற்றிடம் இருப்பதாக அவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

சமீபத்தில், ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சசி தரூர் ஆலோசனை செய்தார். கட்சியில் தன்னுடைய எதிர்காலம் குறித்து அவர் பேசியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், என்ன பேசினார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.

கொரோனா காலத்தில் தடுப்பூசியை கையாண்ட விதம் குறித்தும் ரஷிய – உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா எடுத்த நிலைபாடு குறித்தும் சசி தரூர் பாராட்டி பேசினார். இதற்கு, கேரள பாஜக தலைவரான ராஜீவ் சந்திரசேகர் நன்றி தெரிவித்திருந்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக போட்டியிட்ட ஒரே நபர் சசி தரூர். காந்தி குடும்பத்தின் செயல்பாடுகளை விமர்சித்து சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்களில் சசி தரூரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.