சென்னை: தமிழகத்தின் புதிய காவல் துறை தலைமை இயக்குநராக இருந்து வரும், முதல்வர் ஸ்டாலினுக்கு நெருமான டிஜிபி சங்கா் ஜிவால் இன்றுடன் பணி ஓய்வுபெறுகிறார்.
இதையடுத்து புதிய டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் இன்றுடன் பணிஓய்வு பெறுகிறார். புதிய காவல்துறை தலைவர் தேர்வில் சிலர் இருந்த நிலையில், அவர்களில் யார் புதிய டிஜிபியாக நியமிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து தமிழ்நாடு அரசு இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிட வில்லை.
தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக (டிஜிபி) சங்கா் ஜிவால் கடந்த 2023 ஜூன் 30-ஆம் தேதி பதவியேற்றாா். அவரின் பதவிக்காலம் 2026 ஆகஸ்டு 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. நாளை மற்றும் நாளை மறுதிம் (ஆக.30, 31) வார விடுமுறை நாட்கள் என்பதால், சங்கா் ஜிவால் இன்று (வெள்ளிக்கிழமையுடன்) பணி ஓய்வு பெறுகிறாா்.
சங்கா் ஜிவால் உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா். பொறியாளரான இவா், ஐபிஎஸ் தோ்வில் தோ்ச்சி பெற்று, கடந்த 1990-ஆம் ஆண்டு தமிழக காவல் துறை பணியில் சோ்ந்தாா். மன்னாா்குடி உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியைத் தொடங்கிய சங்கா் ஜிவால், பின்னா், சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், திருச்சி மாநகர காவல் ஆணையா், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநா், உளவுப் பிரிவு டிஐஜி, ஐ.ஜி., சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி, ஆயுதப்படை ஏடிஜிபி, சென்னை பெருநகர காவல் ஆணையா் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளாா். மேலும், இவா் 2 முறை குடியரசுத் தலைவா் பதக்கம் பெற்றுள்ளாா்.
இதற்கிடையில், தமிழகத்தின் புதிய டிஜிபியாக பதவி ஏற்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே இதுதொடர்பாக தமிழக அரசிடம் இருந்து எந்தவொரு முன்மொழிவும் வரவில்லை மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) தெரிவித்திருந்தது. மாநில காவல்துறையின் தலைமை இயக்குநா் பதவிக்கு டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளின் பெயா் பட்டியலை 3 மாதங்களுக்கு முன்பே மாநில அரசு யுபிஎஸ்சிக்கு அனுப்ப வேண்டும். ஆனால், கடந்த வாரம் வரை தகுதிபெறுவோரின் முன்மொழிவை தமிழக அரசு அனுப்பாததால் புதிய டிஜிபி நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், சங்கர் ஜிவால் பணிஓய்வு பெற்றவுடன் புதிய டிஜிபி நியமிக்கும் வரை பிற துறையை கவனித்து வரும் மூத்த டிஜிபி ஒருவரை சட்டம் – ஒழுங்கை கூடுதலாக கவனிக்க அறிவுறுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.