அ.தி.மு.க மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ செங்கோட்டையனுக்கும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவி வருகிறது.
இந்த நிலையில், இன்று கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு கருத்துகளை வெளியிட்டார். அப்போது, ‘அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம். வெளியே சென்றவர்களை அரவணைத்தால்தான் நம்மால் வெல்ல முடியும் என்பது எம்.ஜி.ஆர் சொல்லிக்கொடுத்த பாடம்’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் தற்போது செங்கோட்டையனுக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். இந்த நிலையில், செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள வி.கே.சசிகலா, தனது உடம்பில் ஓடுவது அ.தி.மு.க ரத்தம்தான் என்பதை நிரூபித்துள்ளார் செங்கோட்டையன் என்றும், செங்கோட்டையனின் கருத்துதான் இன்றைக்கு ஒவ்வொரு தொண்டர்களின் கருத்து என்றும் சசிகலா கூறியுள்ளார்.
வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம். இது ஏழை, எளிய, சாமானிய மக்களுக்காகவே உருவான இயக்கம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்ததுபோல் “இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்”.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எந்த சக்தியாலும் அழிக்கமுடியாத ஒரு பேரியக்கம் என்பதை கழக மூத்த முன்னோடியும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் செங்கோட்டையன் நிரூபித்து இருக்கிறார். பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களிலும் செங்கோட்டையன் உடனிருந்தவர். தனது உடம்பில் ஓடுவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரத்தம் தான் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளார். கழகம் ஒன்றுபட வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்துதான் இன்றைக்கு ஒவ்வொரு தொண்டர்களின் கருத்து. தமிழக மக்களின் கருத்தும் இதுதான். நானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன்.
அன்பு சகோதரர் செங்கோட்டையனைப் போன்று உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை தி.மு.க என்ற தீயசக்தி எந்தவிதத்தில் முயற்சி செய்தாலும் அவர்களின் தீய எண்ணம் ஈடேறாது. தி.மு.க-வின் சதித்திட்டத்தை முறியடித்திட கழகத்தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும். இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றது. இதனை எந்த அணை போட்டும் யாராலும் தடுக்க முடியாது. எனவே, தி.மு.க என்ற தீயசக்தி, நம் கழகம் ஒன்றுபட எப்படியெல்லாம் தடைபோட்டு தடுத்தாலும் அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி கழகம் மீண்டும் அதே மிடுக்கோடும், செறுக்கோடும் மிளிரும்.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசு வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. ஒன்றுபட்ட, வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்று படுவோம். வென்று காட்டுவோம். நாளை நமதே. வெற்றி நிச்சயம். பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க. புரட்சித்தலைவர் நாமம் வாழ்க. புரட்சித் தலைவி அம்மா நாமம் வாழ்க. நன்றி வணக்கம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.