செங்கோட்டையனை கிழித்து தொங்கவிட்ட செல்லூர் ராஜு.!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், தவெக வின் முக்கிய நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் அதிமுகவை விமர்சனம் செய்ததற்குப் பதிலடி கொடுத்தார். மேலும், ஆளும் கட்சியான திமுகவையும், குறிப்பாக முதல்வர் மற்றும் உதயநிதியும் கடுமையாகச் சாடினார். அதோடு நேற்று முன்தினம்  குரூப் 2ஏ முதன்மைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறித்தும் கடுமையாக சாடினார்.

அவர் பேசியதாவது, ‘சனிக்கிழமை உதயநிதி, இளைஞர்கள் மாநாடு நடத்தினார். அதில் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் உழைக்கின்றது என்று கூறினார். ஆனால், அரசுப் பணிக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பல லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு சிதைக்கப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றில் இது போன்று தேர்வு ரத்து செய்யப்பட்ட வரலாறே இருந்ததில்லை. இதனால் மாணவர்கள் விரக்தியில் உள்ளனர். மேலும், அவர்கள் ஐந்து ஆண்டுகளாக இந்த தேர்விற்காகப் படித்துக் கொண்டிருக்கின்றனர். இப்போது தேர்வு ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் வாழ்க்கை பேரிடியாக மாறியுள்ளது. . குறிப்பாக, இரண்டு தினங்களுக்கு முன் திருமணம் முடிந்த மணப்பெண், இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டதால் என் கனவும், எதிர்காலம் சிதைந்து விட்டது என்று தெரிவித்துள்ளார். அதோடு இந்த அரசாங்கத்தையும் கடுமையாகச் சாடியுள்ளார். அரசின் நிலைமை இப்படியிருக்க, இனி உதயநிதி என்ன பேசி என்ன ஆகப்போகிறது. முதல்வரே எதிர்க்கட்சிகளைத் தரம் தாழ்ந்து பேசுகிறார். அப்படியிருக்கும் போது அவரது மகனிடத்தில் தரத்தை எதிர்பார்க்க முடியுமா?. அவர் அரசியல் பண்பைக் கற்றுக்கொள்ள வேண்டும். அவரது தாத்தாவின் பண்பையும் அவர் கற்றுக்கொள்ள வேண்டும். அப்பாவும் மகனும் எதிர்க்கட்சியினரைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். அவர்கள் பேசுவதை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள், மக்களுக்கு எல்லாம் தெரியும். ஆமாம், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உழைத்த தியாகிகளின் குடும்பத்திலிருந்து வந்தவர் தான் ஆதவ் அர்ஜுனா. அதனால், அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம். லாட்டரி சீட்டுகளின் மூலமாக ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சி, அதனால் வாழ்க்கை பெற்ற ஆதவ் அர்ஜுனா பேச வேண்டியது தான். அதிமுகவைப் பற்றிப் பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு த.வெ.க. கட்சி என்ன ஆகும் என்பதை, தேர்தல் கருத்துக் கணிப்புகளே தெரிவிக்கின்றன. இதுவரை, எந்த பகுதிக்குச் சென்று இவர்களின் தலைவர் விஜய் மக்களைச் சந்தித்தார். இல்லையெனில், இவர் தான் எந்த மக்களைச் சென்று சந்தித்தார். மக்களிடம் நேரில் சென்று பார்த்தால் தானே, அங்கே என்ன பிரச்சனை இருக்கிறது? என்பது தெரியும். ஊடகத்தில் அமர்ந்துகொண்டு பேசுவது, ட்வீட் செய்வது, இது தான் அரசியலா?. இதை அவர்களின் ரசிகர்கள் ரசிப்பார்கள், மக்கள் ரசிக்க மாட்டார்கள்.

அரசுப்பணிக்கான தேர்வை ரத்து செய்ததன் மூலமாகப் பல லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவை, இந்த அரசு சிதைத்துள்ளது. இதனை, கண்டித்தார்களா? இதற்காகப் போராடினார்களா. இவர்கள் இது சம்பந்தமாக எதையுமே செய்யவில்லை. செங்கோட்டையன் ஒரு செல்லாத நோட்டு, அது ஆயிரம் பேசும். அதையெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை. விஜய்யை, அவர் எந்த நாட்டுக்கு முதல்வர் ஆக்குவார்? கல்லூரிக்கு வேண்டுமானால் முதல்வராக்கலாம். எங்களுடைய நேரடி எதிரி திமுக தான்., தேவையில்லாமல் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் பற்றிய கேள்விகளைக் கேட்டு திசை திருப்பாதீர்கள். இனிமேல், தவெக பற்றி என்னிடத்தில் எதுவும் கேள்விகளைக் கேட்காதீர்கள். இன்றைய அரசியல் நிலை ஸ்டாலினா? இல்லை எடப்பாடியா? என்று தான் இருக்கிறது’ என்று தெரிவித்திருந்தார்.