நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு காவல்துறையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் சீமானுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-ன் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
காவல்துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சீமானுக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரின் மீது அடுத்த பன்னிரண்டு வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அதன் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் சீமான் அவசர அவசரமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விரைவாக விசாரணைக்கு கொண்டு வர சீமான் தரப்பு வழக்கறிஞர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்ட நிலையில் கடந்த மார்ச்சில் விசாரணை நடைபெற்றது.
அப்போது இந்த விவகாரத்தில் இரண்டு தரப்பும் அமர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள் என நீதிபதிகள் அறிவுறுத்தல் கொடுத்திருந்தனர்.
மேலும் அடுத்த விசாரணை நடைபெறும் வரை சீமானுக்கு எதிரான காவல்துறையினர் பதிவு செய்த வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதைத்தொடர்ந்து, கடந்த மே 2-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு தொடரும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதற்குப் பிறகு கடந்த ஜூலை 21, செப்டம்பர் 9 ஆகிய தேதிகளிலும் இதே உத்தரவுதான் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நாகரத்தினா தலைமையிலான அமர்வில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதில் விஜயலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த விவகாரத்தில் செட்டில்மெண்டுக்கு தயார் என சீமான் வாக்குறுதி கொடுத்திருந்தார்.
ஆனால், “ஒரு செய்தியாளர் சந்திப்பில் தான் அப்படி தெரிவிக்கவே இல்லை எனப் பொய் சொல்லியிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் விஜயலட்சுமியை பாலியல் தொழிலாளியாக கேவலமாகப் பேசியிருக்கிறார்” எனக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அப்போது நீதிபதி நாகரத்தினா, “விஜயலட்சுமி கடந்த காலங்களில் சீமானைப் புகழ்ந்து செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார் என சீமான் தரப்பினர் கூறுகிறார்கள்.
இந்த விவகாரத்தில் நீங்கள் இப்படி மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டே இருக்க நீங்கள் இருவரும் குழந்தைகள் கிடையாது” என சற்று கோபமாகக் கூறினார்.
அதையடுத்து விஜயலட்சுமி தரப்பு வழக்கறிஞர், “பாதிக்கப்பட்ட இந்தப் பெண் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோதே திருமண ஆசை காட்டி அவரைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
அவருடன் இணைந்தும் வாழ்ந்திருக்கிறார். பிறகு திருமணம் செய்யாமல் ஏமாற்றி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்திருக்கிறார்.
அந்த திருமணம் நடைபெறுவதற்கு முன்பு வரை தன்னை தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்து வந்ததாகப் புகார் தெரிவித்தார்.
இவற்றின் அடிப்படையில்தான் சீமானுக்கு எதிராக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது என்று தெரிந்தும்கூட பொதுவெளிகளில் தொடர்ச்சியாக அவதூறாகப் பேசி வருகிறார்.
எனவே விஜயலக்ஷ்மி தரப்பிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். தொடர்ந்து அவதூறாக பேசுவதைப் நிறுத்த வேண்டும்.
இதற்காக கூடுதலாக மனு தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறினாலும் அதை மேற்கொள்வதற்கும் தயாராக இருக்கிறோம்” என்றார்.
இறுதியாக நீதிபதிகள், “அவதூறாகப் பேசிய விவகாரத்தில் சீமான் தரப்பு மன்னிப்பு கேட்க வேண்டும்.
அவ்வாறு கேட்கவில்லை என்றால் காவல்துறை வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஏற்க முடியாமல் போகலாம்” என்று கூறி விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும், இந்த விவகாரத்தில் ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு தொடரும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.





