பஹல்காம் தாக்குதலை அடுத்து நாட்டின் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
சென்னை எழும்பூர், எம்ஜிஆர் சென்ட்ரல், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஆகிய இடங்களில் கூடுதல் காவலர்கள் போடப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிசிடிவி உள்ளிட்டவை மூலம் தொடர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகப்படும் நபர்களை அழைத்து விசாரணை நடத்தி, உடமைகளை சோதனை செய்த பின்னர் அனுப்புகின்றனர்.
ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை நடத்த காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உளவுத் துறை தீவிரமாக செயல்பட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் நடவடிக்கை மேற்கொள்ளவும் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதேபோல சென்னை புழல் சிறை, ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலை, கோயம்பேடு மெட்ரோ தலைமை அலுவலகம், மெட்ரோ ரயில் நிலையங்கள், கோயம்பேடு சந்தை உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை இணை ஆணையர் கல்யாண் உத்தரவிட்டுள்ளார்.மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தால் அதுபற்றி வியாபாரிகளும் பொதுமக்களும் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.