எஸ்.பி. வேலுமணி கோட்டையில் களமிறங்கும் ஓபிஎஸ்… கோவையில் செப்டம்பரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்..!

கோவை: கோவையில் வரும் செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை நடத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

தமிழகம் முழுவதும் இருந்தும் தனது ஆதரவாளர்களை பெருமளவில் திரட்டிக்காட்டி தனது செல்வாக்கை உணர்த்தும் வகையில் அந்தக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

இது தொடர்பான முன்னெடுப்பு பணிகளை கோவை செல்வராஜ் மெல்ல ஆரம்பித்திருப்பது கவனிக்கத்தக்கது.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அந்த பொதுக்கூட்டத்தை கோவையில் நடத்துவது பற்றி தீவிரமாக டிஸ்கஷன் செய்யப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிசாமியின் தளபதிகளில் ஒருவருமான எஸ்.பி.வேலுமணியின் ஊரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி அதன் மூலம் மாஸ் கட்டும் திட்டத்தில் இறங்கியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

கோவையில் தனது தலைமையில் நடத்தப்படவுள்ள அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்துக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் ஆதரவாளர்களை திரட்டி வந்து கட்சியில் தனது செல்வாக்கு என்னவென்பதை நிரூபிக்கத் திட்டமிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். பொதுக்கூட்டத்துக்கான முன்னோட்டப் பணிகளை தனது தளகர்த்தரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோவை செல்வராஜ் மூலம் முன்னெடுத்திருக்கிறார். கோவை செல்வராஜூம் அது தொடர்பான ஆலோசனைகளை கோவையில் நடத்த ஆரம்பித்துள்ளார்.

ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஆட்சி மேலிடம் கடுமையான கோபத்தில் இருந்து வரும் சூழலில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு கோவையில் பொதுக்கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி எளிமையாக கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்டத்தை ஜே.ஜே.வென கூட்டி எடப்பாடி பழனிசாமியையும், எஸ்.பி.வேலுமணியையும் ஒரு கை பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு ஓ.பி.எஸ்.வந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தான் இருக்கிறார். அங்கிருக்கும் தனது பண்ணை வீட்டிலிருந்தபடியே தன்னை சந்திக்க வரும் ஆதரவாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.