நரை முடிக்கு சொல்லுங்க பாய் பாய்!

ன்றைய அவசரமான வாழ்க்கை முறை, முறையற்ற உணவுப் பழக்கம், அதிகரித்து வரும் மன அழுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு போன்ற காரணங்களால், இளம் வயதிலேயே பலருக்கு நரை முடி ஒரு பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது.முன்னர் முதியவர்களுக்கே காணப்பட்ட இந்த நரை முடி, இப்போது 20-30 வயதிலேயே தோன்றுவதால் இளைஞர்களிடையே கவலை அதிகரித்து வருகிறது. இதை மறைக்க பலரும் ரசாயன கலந்த ஹேர் டைகள் மற்றும் நிறமூட்டும் தயாரிப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். அவை தற்காலிகமாக முடியை கருப்பாக்கினாலும், நீண்ட காலத்தில் தலையில் அலர்ஜி, முடி உதிர்தல், தலைச் சதை எரிச்சல் மற்றும் கண்களுக்கு பாதிப்பு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில், இயற்கை மருத்துவ முறைகள் மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, தலைமுடி ஆரோக்கியத்திற்கு பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கியமான மூலிகை தான் கரிசலாங்கண்ணி கீரை. ஆயுர்வேதத்தில் இது ‘பிருங்கராஜ்’ என அழைக்கப்படுகிறது. தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் இயற்கை நிறமிகள் இதில் அதிகளவில் இருப்பதால், இது இயற்கையின் ‘கறுப்பு தங்கம்’ எனப் போற்றப்படுகிறது.

கரிசலாங்கண்ணி கீரையில் இரு வகைகள் உள்ளன: வெள்ளை கரிசலாங்கண்ணி மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணி. இதில் தலைமுடி பராமரிப்புக்கு, குறிப்பாக நரை முடியை குறைக்கவும் கருமையை அதிகரிக்கவும் மஞ்சள் கரிசலாங்கண்ணி அதிக பயனுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த இலைகள் தலைமுடியின் வேர்களை பலப்படுத்தி, முடி அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் வளர உதவுகின்றன. மேலும், இதில் உள்ள இயற்கை மூலப்பொருட்கள் மெலனின் உற்பத்தியை தூண்டி, முடியின் இயற்கையான கருப்பு நிறத்தை மீண்டும் பெற உதவுகின்றன.

நரை முடியை இயற்கையாக மறைக்க கரிசலாங்கண்ணி கொண்டு வீட்டிலேயே எளிய முறையில் ஒரு விழுது தயாரிக்கலாம். ஒரு கைப்பிடி அளவு புதிய கரிசலாங்கண்ணி இலைகளை சுத்தம் செய்து, அதனுடன் மருதாணி இலைகள் மற்றும் நெல்லிக்காய் பொடி சேர்த்து நன்றாக அரைத்து விழுதாக்க வேண்டும்.

இந்த கலவையை இரும்புச் சட்டியில் ஒரு இரவு முழுவதும் வைத்தால், இரும்புடன் நிகழும் வினையால் அது அடர் கருப்பு நிறமாக மாறும். மறுநாள் காலை அந்த விழுதை தலைமுடியின் வேரிலிருந்து நுனிவரை தடவி, ஒரு மணி நேரம் கழித்து சீயக்காய் அல்லது குறைந்த ரசாயனமுள்ள ஷாம்பு கொண்டு தலையை அலம்பினால், முதல் பயன்பாட்டிலேயே முடி மென்மையாகவும் கருமையாகவும் மாறுவதை உணர முடியும்.

மேலும், கரிசலாங்கண்ணி மற்றும் ஆவாரம்பூ சேர்த்து தயாரிக்கும் மூலிகை எண்ணெய் தலைமுடி வளர்ச்சிக்கு சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த இலைகளை உலர்த்தி, தேங்காய் எண்ணெயில் மிதமான சூட்டில் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு தடவி குளித்து வந்தால், முடி உதிர்தல் குறைந்து, புதிய முடி வளர்ச்சியும் மேம்படும். இந்த எண்ணெய் தலைச்சூட்டை குறைத்து, கண்களுக்கு குளிர்ச்சி தரும் தன்மையும் கொண்டுள்ளது.

கரிசலாங்கண்ணி கீரையில் இரும்புச் சத்து, கால்சியம், வைட்டமின் ஈ போன்ற முக்கிய ஊட்டச்சத்துகள் இருப்பதால், இது தலைமுடி மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் பலனளிக்கிறது. உடல் சூட்டை தணிக்கும், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் ரத்த சுத்திகரிப்புக்கும் உதவுகிறது என பாரம்பரிய மருத்துவ முறைகள் தெரிவிக்கின்றன.

மொத்தத்தில், ரசாயன ஹேர் டைகளின் தற்காலிக அழகை விட, கரிசலாங்கண்ணி போன்ற இயற்கை மூலிகைகளை தொடர்ந்து பயன்படுத்துவது நீண்ட காலத்தில் பாதுகாப்பானதும் பயனுள்ளதாகவும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை இந்த இயற்கை முறைகளை பின்பற்றினால், நரை முடி பிரச்சனையை கட்டுப்படுத்துவதுடன், ஆரோக்கியமான, அடர்த்தியான மற்றும் இயற்கை கருமை நிற கூந்தலை எளிதாகப் பெற முடியும்.

இயற்கை நமக்கு அளித்துள்ள இந்த எளிய மூலிகை பொக்கிஷத்தை சரியாக பயன்படுத்தினால், பக்கவிளைவுகள் இல்லாத தலைமுடி பராமரிப்பு முறையை நாம் மீண்டும் வாழ்வில் கொண்டு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.