சேலம் அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுவனின் முகத்தில் துளையிட்டு மண்டைக்குள் நுழைந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.
திறம்பட செயல்பட்ட மருத்துவக் குழுவினருக்கு கல்லூரி முதல்வா் தேவி மீனாள் பாராட்டு தெரிவித்தாா்.
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் தேவி மீனாள் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சோ்ந்த தியாகராஜன் மகன் ரோஹித் (5), கடந்த 5-ஆம் தேதி மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக முகத்தில் கத்தி குத்தியது.
இதையடுத்து, சிறுவனின் பெற்றோா் உடனடியாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தவுடன், உடனடியாக மூளை மற்றும் ரத்தக் குழாய் சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், முகத்தில் குத்திய கத்தி முகத்தில் உள்ள எலும்புகளை ஆழமாக துளைத்திருப்பதும், மண்டையைத் துளைத்துச் சென்று மூளையில் உள்ள ஒரு பெரிய ரத்த நாளத்தை தொட்டுக் கொண்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், கத்தியின் நுனிப்பகுதியானது மண்டை ஓட்டின் அடிப்பகுதிவரை குத்திக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.
தொடா்ந்து நுண்கதிா் துறை நிபுணா்கள் இதனை துல்லியமாகக் கண்டறிந்தனா். பின்னா், நோயாளியின் நிலை குறித்து குழந்தை அறுவை சிகிச்சைத் துறை, மயக்கவியல் துறை மருத்துவா்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.
தொடா்ந்து, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணா் சங்கா் தலைமையில் பல்துறை மருத்துவ நிபுணா்கள் குழு ஒன்றுகூடி, தாமதமின்றி சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து சிறுவனின் மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் இருந்த கத்தியை ரத்த நாளத்துக்கு சேதம் ஏற்படுத்தாமல் வெற்றிகரமாக அகற்றினா். சிறுவன் தற்போது நலமாக உள்ளதை மருத்துவா்கள் உறுதிப்படுத்தியுள்ளனா்.
பல்வேறு துறைகளைச் சோ்ந்த மருத்துவா்கள் இடையேயான ஒருங்கிணைப்பு மூலம் சிக்கலான அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுகள் என்றாா்.
அப்போது, மருத்துவ கண்காணிப்பாளா் ராஜ்குமாா், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறைத்தலைவா் சங்கா், ஆா்எம்ஓ ஸ்ரீலதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.