சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் திடீர் திருப்பம்..!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரக பாலகர் சிலைகளுக்கு தங்க மூலாம் பூசியபோது 4.5 கிலோ தங்கம் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்திவரும் நிலையில், தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன்படி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் 21 இடங்களில் ஒரே சமயத்தில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமாரின் வீடு, திருவனந்தபுரத்தில் உள்ள தேவசம் வாரிய தலைமையகம் மற்றும் உன்னிகிருஷ்ணன் போட்டி இல்லம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

மறுபுறம் சென்னையில் மட்டும் 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தினர். சென்னை அம்பத்தூரில் உள்ள ஸ்மார்ட் கிரியேஷன் எனும் தங்க முலாம் பூசும் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது. அமலாக்கத்துறை உதவி இயக்குநர் முகேஷ் குமார் தலைமையில் 3 அதிகாரிகள் மற்றும் 4 துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் காவலர்களின் உதவியுடன் நேற்று காலை 7 மணி முதல் நடைபெற்ற விசாரணை 14 மணி நேரம் ஆய்வுக்கு பிறகு நிறைவுபெற்றது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் பங்கஜ் பண்டாரி சிறையில் உள்ள நிலையில் ஊழியர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அதேபோல அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. 2019ஆம் ஆண்டின் வங்கி முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.