கோவை ஈஷாவில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்தது கவனம் பெற்றுள்ளது. தேமுதிக இன்னும் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் இணைகிறதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் பம்பரமாய் சுழன்று தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. தற்போதைய சூழலில் தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டி நிலவினாலும், ஆளும் திமுகவும், ஆண்ட அதிமுகவும் பலம் பொருந்திய கூட்டணியுடன் களம் இறங்கத் தயாராகி வருகின்றன. அந்த வகையில், பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணி நிலைப்பட்டை அறிவித்துவிட்டன.
ஆனால், தேமுதிக தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது. கடந்த மாதம் 9ஆம் தேதி கடலூரில் நடைபெற்ற மாநாட்டில் தேமுதிக தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கும் என உறுதிப்பட கூறியிருந்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா. இதனால் தேமுதிகவின் மாநாட்டின் மீதான கவனம் அதிகரித்தது. ஆனால், மாநாட்டில் பேசிய பிரேமலதா, மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூட்டணி நிலைப்பாட்டை எடுத்துவிட்டதாகவும், தெளிவாக சிந்தித்து ஒரு மகத்தான கூட்டணியை விரைவில் அறிவிப்போம் என்றும் தெரிவித்தார்.









