ஜெகன் ஆட்சியில் ரூ.1000 கோடி ஊழல்: ஆந்திராவில் ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் அதிரடி கைது..!

மராவதி: ஆந்திராவில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் நடைபெற்ற ரூ.1,000 கோடி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ்.

அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே டெல்லியில் ஆட்சி செய்த ஆம்ஆத்மி கட்சியில் நடைபெற்ற மதுபான கொள்கை முறைகேடு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அப்போது டெல்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால், துணைமுதல்வர் சிசோடியா உள்பட பலர் கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆத்ஆத்மி கட்சி மண்ணை கவ்வியது.

இதுபோன்ற ஒரு ஊழல் ஆந்திராவில் ஆட்சி செய்து வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியிலும் அரங்கேறியுள்ளது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் புதிய மதுபானக் கொள்கை கொண்டுவரப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொர்பாக எஐடி விசாரணை நடத்தி வந்தது. அதைத்தொடர்ந்து, மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில், 3,200 கோடி ரூபாய் அளவுக்கு மதுபான ஊழல் நடந்ததாக, நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அறிக்கை தாக்கல் செய்தது.

அதன் தொடர்ச்சியாக, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தனுஞ்சய ரெட்டி, கிருஷ்ண மோகன் ரெட்டி ஆகியோரை கைது செய்தது எஸ்.ஐ.டி. நடவடிக்கை எடுத்துள்ளது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான தனுஞ்சய ரெட்டி, முன்னாள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையிலான நிர்வாகத்தில் முக்கியப் பதவியில் இருந்தார். முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் சிறப்புப் பணி அதிகாரியாக (ஓஎஸ்டி) கிருஷ்ண மோகன் ரெட்டி பணியாற்றினார். இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில், ஜெகன் மோகனை சிறப்பு புலனாய்வு குழுவினர் எந்த நேரத்திலும் நெருங்கும் என்றும், அவர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ந்திராவில் தற்போது, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2019 — -24ல் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ஆர்.காங்.,கை சேர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், அதாவது, 2019ல் ஜெகன் மோகன் முதல்வரானதும், அந்த நடைமுறையை நிறுத்தி விட்டு, தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ போலவே, ‘பி.சி.எல்., நிறுவனமே நேரடியாக மதுக்கடைகளை நடத்தியது. இதன்மூலம், மதுபான கொள்முதல், விற்பனையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுபோல, பி.சி.எல்., எனப்படும் ‘மதுபான கார்ப்பரேஷன் லிமிடெட்’ சார்பாக சில்லரை விற்பனை மதுக்கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டன. இதிலும் முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது.

இதற்கிடையில் முதல்வர் சந்திரபாபு தலைமையிலான கூட்டணி ஆட்சி பதவிக்கு வந்ததும், கடந்த ஆண்டு சந்திரபாபு நாயுடு முதல்வரானதும் ‘மதுபான கார்ப்பரேஷன் லிமிடெட்’ மதுபான கடைகளை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

விசாரணையில், ஜெகன் மோகனின் கடந்த ஐந்தாண்டு ஆட்சியில், அவரது ஐ.டி.,விங் தனி ஆலோசகரான ராஜ் காசி ரெட்டி, ஒட்டு மொத்த மதுபான வர்த்தகத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது தெரியவந்தது.

அவரை கைது செய்து, அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருந்தார். அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘பிரபலம் இல்லாத கம்பெனிகளில் மதுபானம் கொள்முதல் செய்ய, கட்சி மற்றும் அரசின் மேல்மட்டம் வரை 20 சதவீத கமிஷன் பெறப்பட்டது. கடந்த ‘2019 அக்., முதல் 2024 மார்ச் வரை மாதந்தோறும் 60 கோடி ரூபாய் வரை இதுபோன்று கிடைத்தது. ‘இறுதி பெறுநர்’ எனப்படும் ‘டாப் மேன்’ வரை பணம் சென்றது’ என தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த ஊழல் தொடர்பாக மற்றொரு முக்கிய நகர் சாணக்யாவும் கைது செய்யப்பட்டார். அவரிடமும் கிடுக்கிபிடி விசாரணை நடைபெற்றது. இதிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது அம்பலமானது.

அதாவது, காசி ரெட்டி (ஜெகன்மோகன் ரெட்டியின் ஐ.டி.,விங் தனி ஆலோசகரான) ராஜ் காசி ரெட்டி துவங்கி ஜெகன் மோகனுக்கு நெருக்கமான விஜய் சாய் ரெட்டி, மிதுன் ரெட்டி, ஜெகன் மோகனின் உறவினர் ஒய்.எஸ்.சுனில் ரெட்டி, ஜெகன் மோகனின் மனைவி பாரதிக்கு சொந்தமான, ‘பாரதி சிமென்ட்’ நிறுவன அதிகாரி கோவிந்தப்ப பாலாஜி ஆகியோர் வழியாக, ‘டாப் மேன்’ என்பவருக்கு பணம் சென்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் கடந்த ஐந்தாண்டு ஆட்சியில், மொத்தம் 3,200 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை அளித்துஉள்ளது.

இந்த முறைகேடான பணம் அனைத்தும் போலி ஜி.எஸ்.டி., பில்கள் வாயிலாக பொருட்களை அனுப்புதல், துணி நிறுவனங்கள், தங்க காசுகள், ஹவாலா, போன்ற வழிகளில் ஹைதராபாத், மும்பை, டில்லி போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதால் அமலாக்கத் துறையும் களமிறங்குகிறது. ‘டாப் மேன்’ யார் என்ற கேள்வியை எழுப்பி, ஐந்து ஆண்டுகளில் 10,000 கோடி ரூபாய் அளவுக்கு மதுபான ஊழல் நடந்திருப்பதாக, ஆளும் தெலுங்கு தேசம் கட்சி கூறுகிறது.

இந்த முறைகேடு தொடர்பாக எஸ்ஐடி, காசி ரெட்டி, சாணக்யா இருவரிடமும் இரண்டு முறை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி கைது செய்தது. இதைத்தொடர்ந்து,. தற்போது முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஆந்திர அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.