சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியில், அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹார்ன் மாட்டி வந்த 20 இருசக்கர வாகனங்களை, அங்கேயே காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கோவையின் பெருமையை பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் கோவை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள கல்வி நிறுவனங்கள், தொழில் அமைப்புகள், மருத்துவமனை நிர்வாகங்கள், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் என அனைத்து தரப்பினரும் இணைந்து இந்த கோவை விழாவை நடத்தி வரும் நிலையில்,18 வது கோவை விழா 14 ஆம் தேதி தொடங்கி,25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பங்கேற்கும் இருசக்கர வாகன பேரணி, நடைபெற்றது. பேரணியில் பங்கேற்பதற்காக காலை முதல் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்கு, இரு சக்கர வாகனங்கள் அணிவகுத்து வந்தனர். இதனிடையே இருபதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அந்த வளாகத்திற்குள் வரும் பொழுதே, அதிக ஒலி எழுப்பும் வகையில், சைலன்சர் மற்றும் ஏர் ஹார்ன் பொருத்தி அலப்பறை செய்தனர். மேடையில் நின்று கூட்டத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த மாநகர காவல் துறை போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் அசோக்குமார், விதிகளுக்கு மாறாக அதிக ஒலி எழுப்பியபடி வந்த 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை அங்கேயே பறிமுதல் செய்யுமாறு போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். தொடர்ந்து இருசக்கர வாகன பேரணியானது துவங்கி நடைபெற்ற நிலையில், மாநகரின் முக்கிய சாலைகள் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்திய படி, பேரணியானது நடத்தப்பட்டது. பின்னர் பேரணி முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களை இயக்குமாறு அறிவுறுத்தி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.








