இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பலாம்: முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம்.!!

டெல்லி : இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு நிவாரண பொருட்களை வழங்க அனுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு தமிழக அரசு உதவிப் பொருட்களை வழங்க கடந்த ஏப்ரல் 13ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தும் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் இதற்கு அனுமதித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கொழும்புவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்திடம் தமிழக அரசு உதவிகள் குறித்து கூறியதாகவும் அதற்கு இலங்கை அரசு அனுமதி கொடுத்துள்ளதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இலங்கைக்கு இந்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை வழங்கி வரும் நிலையில், தமிழக அரசு வழங்கக்கூடிய உதவி பொருட்களும் ஒன்றிய அரசின் நிவாரண பொருட்களுடன் சேர்த்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நடவடிக்கைகளில் ஒன்றிய அரசுடன் தமிழக அரசின் தலைமை செயலாளர் இணைந்து செயல்படலாம் எனவும் தமிழக அரசின் நிவாரணப் பொருட்கள் தொடர்பான விவரங்களை ஒன்றிய அரசுக்கு தெரிவிக்கும்படியும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.