சிறு பரிசோதனைக் கூடங்களுக்கான பதிவுகட்டணம்: ரூ.5,000-ல் இருந்து ரூ.1,000 ஆக குறைப்பு-அமைச்சர் தகவல்.!!

சென்னை: சிறிய மருத்துவப் பரிசோதனைக் கூடங்களுக்கான பதிவுக் கட்டணத்தை ரூ.5,000-ல் இருந்து ரூ.1,000 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச் சங்கத்தின் சார்பில்,தரக் கட்டுப்பாடு நிர்ணயம் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. சங்கத்தின் அகில இந்திய தலைவர் தலைமைவகித்தார். சிறப்பு அழைப்பாளராக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.

பரிசோதனைக் கூடங்களுக்கான தேசிய தர நிர்ணய அமைப்பின் தலைமை செயல் அலுவலர் என்.வெங்கடேஸ்வரன், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கப் பொதுச் செயலர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலர் ஏ.ஆர்.சாந்திமற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆய்வகத் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான கவுன்சில்தொடங்க நடவடிக்கை மேற்கொள்வதற்கு இதில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், பல்வேறுகோரிக்கைகள் அடங்கிய மனுவைஅமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.

ஆய்வகத் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். மாவட்டம்தோறும் உயிரியல் மருத்துவக் கழிவு மேலாண்மை நிறுவனங்களை தமிழக அரசே நிறுவி,அதன் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்களின் மருத்துவக் கழிவுகளை கையாள வேண்டும். சிறிய பரிசோதனைக் கூடத்துக்கான பதிவுக் கட்டணத்தை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.1,000ஆக குறைக்க வேண்டும்.

பல இடங்களில் மருந்துக் கடைகளிலேயே ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற செயல்பாடுகளுக்கு தடைவிதிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் இருந்தன. மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், ”சிறு பரிசோதனைக் கூடங்களுக்கான பதிவுகட்டணத்தை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.1,000ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.