தொடர்ந்து பெய்த கனமழையால், ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா , தாளடி. நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்தன. வேர்கள் முழுவதும் அழுக தொடங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி நெல் பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கனமழை காரணமாக, சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்யாத நிலையில் வயல்வெளியில் தேங்கிய மழை நீரை அகற்றி தண்ணீரை விவசாயிகள் வடிய வைத்து வந்தனர்.

மூன்று தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலம் , ஏத்தக்குடி வடபாதி , பொன்னமங்கலம் , குறிச்சி ,சோழபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி நெற்பயிர்கள் , மழைநீரில் மூழ்கி வேர்கள் முழுவதும் அழுகத் தொடங்கியது. வயல்களில் தேங்கிய மழை நீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்த பகுதியில் வடிகால் வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரிட வேண்டும்,பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கெடுத்து தமிழக முதலமைச்சர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.கடன் வாங்கி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தொடரும் மழையால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.








