ராகுல் – கனிமொழி திடீர் சந்திப்பு..!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி அமைத்து பாமக, தாவக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி அரசியலுக்கு ஆயத்தமாக உள்ளது. ஆனால் வலுவான கூட்டணி என்று சொல்லி வந்த திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற முழகத்தை முன் வைத்துள்ளனர்.இது திமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், நாடாளுமன்றத் தேர்தலின் போது உருவான இந்தியா கூட்டணி தொடர்கிறது என்று திமுகவும் காங்கிரஸும் அதிகாரப்பூர்வமாக வலியுறுத்தி வந்தாலும், நடைமுறை அரசியலில் இரு கட்சிகளுக்கிடையேயான கருத்து வேறுபாடுகள் தெளிவாக வெளிப்படுகின்றன.

குறிப்பாக தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சியில் பங்கு பெறுதல் போன்ற விவகாரங்களில் ஒத்த கருத்து உருவாகாத சூழல் நிலவுகிறது. இந்த முறை வெறும் தேர்தல் உடன்பாடு மட்டுமல்லாமல், ஆட்சித் தீர்மானங்களிலும் பங்கு வேண்டும் என்ற காங்கிரஸ் நிலைப்பாடு திமுக வட்டாரத்தில் சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், இரு கட்சிகளின் உள்ளூர் நிர்வாகிகள் இடையே ஏற்பட்டுள்ள நேரடி வாக்குவாதங்கள் கூட்டணியில் பதற்றத்தை அதிகரித்துள்ளன. மதுரையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ கோ. தளபதி கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பின. காங்கிரஸ் தலைவர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர் மீண்டும் போட்டியிட வேண்டாம்; திமுகவின் ஆதரவால்தான் அவர்கள் வெற்றி பெற்றனர் என அவர் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இந்த கருத்து காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்வினையை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், இனி மௌனமாக இருக்க முடியாது எனவும், கோ. தளபதி போட்டியிடும் மதுரை வடக்கு தொகுதியிலேயே காங்கிரஸ் உரிமை கோரலாம் என சவால் விடுத்துள்ளார். அதேபோல், கரூர் ஜோதிமணியும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். கூட்டணி மரியாதைக்காகவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உள்ள மதிப்புக்காகவும் தான் இதுவரை அமைதியாக இருந்ததாக கூறிய அவர், தனிப்பட்ட தாக்குதல்களை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டணி குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என ராகுல் காந்தி அறிவுறுத்தியிருந்தபோதும், அடிமட்ட தொண்டர்கள் மற்றும் இரண்டாம் நிலை தலைவர்கள் இடையேயான இந்த மோதல்கள் தலைமைக்கு சிக்கலை உருவாக்கியுள்ளன. இந்நிலையால் கூட்டணியின் ஒருங்கிணைப்பு குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இன்று ஜனவரி 28ஆம் தேதி திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி டெல்லி பயணம் மேற்கொள்வதாகவும், அங்கு காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு திமுக-காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டு ஆலோசனைகள் விரைவில் ஆரம்பிக்க உள்ள சூழலில் இந்த சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. கூட்டணியின் எதிர்கால திசை, தொகுதி ஒதுக்கீட்டு வடிவமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த தேர்தல் அணுகுமுறை குறித்து ஆரம்ப நிலை கருத்துப் பரிமாற்றம் நடைபெறலாம் என மதிப்பிடப்படுகிறது. அதனால் இந்த சந்திப்பு தேசிய, மாநில அரசியல் தரப்பிலும் கவனம் ஈர்த்துள்ளது.