எந்த நேரத்திலும் கைதாகலாம் புஸ்ஸி ஆனந்த்..?

ரூர் துயரச் சம்பவம் பூதாகரமாக வெடிக்க, தமிழ்நாடு அரசின் சார்பில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்பட 4 பேர் மீது கரூர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நால்வரையும் கைது செய்ய முடிவு எடுத்ததில், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் தெற்கு மாவட்ட பொருளாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் ஜாமின் கோரி வரும் 6-ம் தேதி கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்த நிலையில் தலைமறைவாக உள்ள தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இருவரையும் தேடும் பணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எந்த இடத்தில் பதுங்கி உள்ளனர் என்று தெரியாமல் உள்ள சூழ்நிலையில், சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இவர்களை தேடும் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இவர்கள் இருவரும் இந்த கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் தங்களுக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதன் விசாரணையானது இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரின் முன் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

ஏற்கனவே தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வரும் நிலையில், முன்ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் புஸ்ஸி ஆனந்த் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது