புஸ்ஸி ஆனந்த் தலைமறைவு..? முக்கிய புள்ளியின் பங்களாவில்… யார் அவர்? தேடும் தமிழக தனிப்படை போலீஸ்.!

சென்னை: கரூரில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது ஜாமீனில் வெளிவராத அளவுக்கு வழக்குப் பதிவு செய்துள்ளதால் அவர் தலைமறைவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அவரை தனிப்படை போலீஸார் தேடி வரும் நிலையில் அவர் புதுவையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை அன்று தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில் அதில் சிக்கிய 41 பேர் பலியாகிவிட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸிஆனந்த், இணை பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவர்கள் மூவரும் தலைமறைவாக இருந்த நிலையில் மதியழகன் இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக நகரச் செயலாளர் பவுன்ராஜும் கைதானார். இருவரையும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது பல்வேறு வாதங்களை போலீஸ் தரப்பு வைத்துள்ளது.

அதில் “தவெக கேட்ட லைட் ஹவுஸ் பகுதியில் ரயில்வே பாலம் இருப்பதால் அனுமதி தரவில்லை. மேலும் சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் அன்று மார்க்கெட் பகுதிக்குள் அதிக மக்கள் வருவார்கள் என்பதால் அவர்கள் கேட்ட இடத்தை கொடுக்கவில்லை.

விஜய் நேரத்தை கடைப்பிடிக்காததே கூட்ட நெரிசலுக்கு காரணம். பரப்புரை வாகனம் குறிப்பிட்ட இடத்தை வந்ததும் நான் போதும் என்றேன். ஆனால் ஆதவ் அர்ஜுனாதான் “இன்னும் முன்னே செல்வோம்” என்றார்.

அது போல் முனுசாமி கோயில் பகுதியில் புஸ்ஸி ஆனந்த் வாகனத்தை நிறுத்தி தாமதம் செய்தார். விஜய்யின் பரப்புரை வாகனம் ராங் ரூட்டில் சென்றது. கரூர் மேம்பாலத்தில் வரும்போதே வேண்டுமென்றே காலதாமதம் செய்தனர். முனியப்பன் கோயில் பகுதியில் கேரவன் உள்ளே விஜய் சென்றுவிட்டார். அங்கேயே விஜய்யை பார்த்திருந்தால் கூட்டம் கலைந்திருக்கும். இவ்வாறு கரூர் நீதிமன்ற நீதிபதி பரத்குமாரிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் நெருக்கடிகள் தொடர்ந்து வருவதால் புஸ்ஸி ஆனந்த்தையும் நிர்மல்குமாரையும் தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள். தலைமறைவாகவே இருந்து கொண்டு முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளனர். புஸ்ஸி ஆனந்த் ஏற்காட்டில் இருப்பதாக தகவல் கிடைத்து அவரை போலீஸார் தேடினர். ஆனால் அவர் அங்கு இல்லை என சொல்லப்படுகிறது.

சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் புஸ்ஸி ஆனந்தை தேடி வரும் நிலையில் அவர் புதுவையில் போலீஸ் பாதுகாப்பு மிகுந்த முக்கிய புள்ளியின் பங்களாவில் தஞ்சமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய முடியாமலும் அங்கு போய் அவர் இருக்கிறாரா என்றும் சோதனை நடத்த முடியாமல் தமிழக தனிப்படை போலீஸார் புதுவையில் முகாமிட்டு வருகிறார்கள் என சொல்லப்படுகிறது.

அந்த முக்கிய புள்ளி யார் என தெரியவில்லை. ஆனந்த் புதுவையில் புஸ்ஸி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ என்பதும் அவர் புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனந்தின் முயற்சியால்தான் விஜய்- ரங்கசாமி சந்திப்புகள் கடந்த காலங்களில் நடந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனந்தின் வீடு புதுவை ஏனாம் பகுதியில் வெங்கடாச்சல பிள்ளை வீதியில் உள்ளது.

இன்று புஸ்ஸி ஆனந்தின் முன் ஜாமீன் மனு மீது விசாரணை நடத்தப்படுவதால் அதன் தீர்ப்பை பொறுத்து புஸ்ஸி ஆனந்த் மீதான நடவடிக்கை தீவிரமடையுமா, இல்லை காவல் துறை மேல் முறையீடு செய்யும் அளவுக்கு போகுமா என்பது தெரியவரும்.