கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியில், பேரூர் சோதனை சாவடி அருகே ஆத்தங்கரை வாய்க்கால் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு கடையின் முன்பு ஒருவர் போர்வையால் மூடியபடி தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை அந்த வழியாகச் சென்ற ஒரு வாலிபர் திடீரென அந்த நபரின் தலையில் கல்லை போட்டு கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து செல்வபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அழகுராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கொலை செய்யப்பட்டவர் 50 வயது மதிக்கத்தக்கவர் என்பது தெரிய வந்தது .அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு துணை கமிஷனர் கார்த்திகேயன் , உதவி கமிஷனர் அஜய் தங்கம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் அந்த வழியாக சென்று வந்தது தெரிய வந்தது. அவரது உடை மற்றும் அடையாளத்தை வைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது .சில மணி நேரத்தில் அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர் .
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் கொலையாளி உடனடியாக பிடிபட்டுள்ளார். அவரது பெயர் விஜய் ( வயது 25) பேரூரை சேர்ந்தவர். கொலை செய்யப்பட்டவர் வாக்குவாதம் செய்ததால் கொலை செய்ததாக அவர் கூறியுள்ளார். கைதான விஜய் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு வழக்கில் பிடிபட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது சிறையில் கைதி ஒருவருடன் தகராறு செய்து அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். மேலும் ஜாமினில் விடுதலையாகி வெளியே சுற்றித் திரிந்த விஜய் இப்போது இரண்டாவது முறையாக தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார் .அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் தெரிகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.