ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 610 ஆக உயர்ந்துள்ளது என்று தாலிபன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காயமடைந்த 115 க்கும் மேற்பட்டோர் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
8 கி.மீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.0 அளவிலானதாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 23:47 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போதிருந்து, குறைந்தது மூன்று பிந்தைய நில அதிர்வுகள் – 4.5 மற்றும் 5.2 வரையிலான அளவுகளுடன் ஏற்பட்டுள்ளன.
சுமார் 200 கி.மீ தூரத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும், கிட்டத்தட்ட 400 கி.மீ தூரத்தில் உள்ள பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் சில வினாடிகள் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் மீட்புக்குழுவினர் விரைந்து செல்வதற்கு எளிதானவை அல்ல, மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பைக் கொண்டவை. அங்குள்ள வீடுகள் பொதுவாக நிலநடுக்கத்தை தாங்கக் கூடியவை அல்ல. ஆகவே, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகரும், ஆப்கானிஸ்தானின் ஐந்தாவது பெரிய நகரமுமான ஜலாலாபாத்திலிருந்து 27 கி.மீ (17 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்தது. இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தட்டுகளின் சந்திப்பில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்தான பகுதியாக உள்ளது.
நங்கஹார் மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த தானம் செய்ய தன்னார்வலர்கள் மருத்துவமனைகளுக்கு விரைந்துள்ளனர். அங்கு இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாலிபான் அரசின் துணை ஆளுநர் அஜிசுல்லா முஸ்தபா பிபிசியிடம் கூறுகையில், கிட்டத்தட்ட 30 பேர் அவர் மேற்பார்வையிட்ட மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த பேரழிவு “பரவலாக” இருப்பதால் “குறிப்பிடத்தக்க உயிரிழப்புகள் ஏற்படக்கூடும்” என்று அதன் மாதிரி கணிப்புகள் மதிப்பிடுகின்றன.
இப்பகுதியில் இதே அளவிலான முந்தைய பூகம்பங்களுக்கு பிராந்திய அல்லது தேசிய அளவிலான மீட்புப் பணிகள் தேவைப்பட்டுள்ளன என்று குறிப்பிடுகிறது.
தொலைதூர மலைப்பகுதிகளில் மீட்பு பணிகளுக்கு உதவுமாறு தாலிபன் அரசு அதிகாரிகள் உதவி வழங்கும் அமைப்புகளை வலியுறுத்தியுள்ளனர்.
வெள்ளம் மற்றும் நிலநடுக்கத்திற்குப் பிந்தைய அதிர்வுகளால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இப்பகுதிக்கான சாலைகள் அணுக முடியாத அளவுக்கு இருப்பதாக என்று குனார் மாகாண காவல்துறைத் தலைவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
மீட்புப் பணிகளை விமானம் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.
தாலிபன் அதிகாரிகள் தங்களிடம் குறைவான வளங்கள் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைய ஹெலிகாப்டர்களை வழங்க சர்வதேச அமைப்புகளின் உதவியைக் கோருவதாகவும் கூறுகின்றனர்.