காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலாத் தலங்கள் மற்றும் கடற்கரைகளில் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்பதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் உடனடி சிகிச்சை அளிக்கவும் அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சென்னை மெரினா, எலியட்ஸ் கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, மாமல்லபுரம் மற்றும் முக்கியக் கேளிக்கை பூங்காக்களில் தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் ரத்த அழுத்தம் (BP), சர்க்கரை அளவு (Sugar) பரிசோதனை செய்யப்படுவதோடு, காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளுக்குத் தேவையான மருந்து மாத்திரைகளும், நீர்ச்சத்து குறைபாட்டைத் தவிர்க்க உப்பு-சர்க்கரை கரைசலும் (ORS) இலவசமாக வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் முக்கிய சந்திப்புகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பொதுமக்களுக்குக் குடிநீர் வசதி மற்றும் முதலுதவி மையங்கள் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவசர காலக் கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.









