சந்தையில் மாடு,ஆடு,கோழிகள் விற்பனை.பொங்கல் பண்டிகை!

பொங்கல் திருநாளை முன்னிட்டு மட்றப்பள்ளி சந்தையில் மாடுகள், ஆடுகள், கோழிகள் அமோகமாக  3 கோடி ரூபாய் மேல் விற்பனை ஆனது.

தைத் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டம் மட்றப்பள்ளி சந்தையில் மாடுகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளின் விற்பனை அமோகமாக நடைபெற்றது.இந்த சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்தும், வியாபாரிகள் மாடுகள் மற்றும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனால் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மாட்டுப் பொங்கலை சிறப்பாக கொண்டாட, பொதுமக்கள் ஆர்வமுடன் கால்நடைகளை வாங்கி சென்றனர். அதேபோல், மாடுகளுக்குத் தேவையான கயிறு, சலங்கை, அலங்காரப் பொருட்கள், பாரம்பரிய மாட்டுப் பொங்கலுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது.
மூங்கில், பூசணிக்காய், மண் பானைகள், அடுப்பு உள்ளிட்ட பொங்கல் விழாவிற்கு தேவையான பொருட்களையும் சந்தையில் அதிக அளவில் விற்பனையாகியது.

வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வந்த மாடுகள் மற்றும் ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனையானதால் மகிழ்ச்சி அடைந்தனர்.அதேபோல், வாங்குபவர்களும் திருப்தியுடன் பொருட்களை வாங்கிச் சென்றனர்.மொத்தமாக மட்றப்பள்ளி சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.