தமிழ்நாடு காவல்துறை சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் போலீஸ் , சிறை வார்டன், தீயணைப்பு ஆகியவற்றில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக ஆட்கள் தேர்வு செய்யும் பணி கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது .இந்த பணியில் சேர கோவை, நீலகிரி ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 750 பேர் விண்ணப்பித்திருந்தனர் . அவர்களுக்கான உடல் தகுதி தேர்வு நேற்று நடைபெற்றது. முதல் நாளான நேற்று 430 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவர்கள் அனைவரும் நேற்று காலை முதல் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் குவிந்தனர் .பின்னர் போலீசார் அவர்களை வரிசையாக உட்கார வைத்தனர் . இதனை தொடர்ந்து அவர்களின் சான்றிதழ் சரி பார்க்கும் பணி நடைபெற்றது. இதனையடுத்து இதில் பங்கேற்ற இளைஞர்களின் உயரம் மற்றும் மார்பளவு சரி பார்க்கும் பணி நடைபெற்றது. இந்த பணிகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1500 மீட்டர் ஓட்ட பந்தயம் நடைபெற்றது .இந்த பணிகளை கோவை சரக டி.ஐ.ஜி. சசி மோகன் கண்காணித்தார். இதனை தொடர்ந்து மீதமுள்ள இளைஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உயரம், மார்பளவு சரிபார்க்கப்படும் இறுதி தேர்வு நாளை ( சனிக்கிழமை) நடக்கிறது . இதில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு கயிறு ஏறுதல், உயரம் தாண்டுதல், ஓட்டபந்தயம், உள்ளிட்டவை நடத்தப்படும் மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் இந்த தேர்வை உயர் போலீஸ் அதிகாரிகள் கண்காணித்தனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மைதானம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
போலீஸ் வேலைக்கு உடல் தகுதி தேர்வு..!








