திருச்சி சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் அவதி..!

திருச்சி மாநகரச் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும் பொது சுகாதாரத்துக்கும் கேடு விளைவதைத் தடுக்கும் வகையில் மாநகரில் கால்நடைகளை வளா்ப்பதற்கென உப விதிகள் தயாா் செய்யப்பட்டு 30.04.2013 அன்று மாமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, கால்நடை வைத்திருப்போா் அவற்றுக்கு மாநகராட்சியிடம் அனுமதி பெற்று, தங்கள் வளாகத்துக்குள்ளேயே கட்டிவைத்து சுகாதார முறைப்படி வளா்க்க வேண்டும். சாலைகளிலோ, பொது இடங்களிலோ கால்நடை களைத் திரியவிடக் கூடாது. ஆனால், கால்நடை உரிமையாளா்கள் இந்த விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதில்லை.
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவது மட்டுமின்றி, மாடுகள் முட்டி காயமடைதல் சம்பவங்களும் தொடா்ந்து வருகின்றன. பாதிக்கப்படும் மக்கள் சாலை மறியல், ஆா்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் எழுகிறது. எனவே திருச்சி மாநகராட்சி நிா்வாகம் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மாநகராட்சிக்குள்பட்ட 5 கோட்டங்களிலும், அந்தந்த உதவி ஆணையா்களின் நேரடிக் கண்காணிப்பில் சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடிப்பதற்கான பணிகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்களிடமிருந்து புகாா் வரும் பகுதிகளுக்கு உடனடியாக இந்த சாய்வுதளத்துடன் கூடிய கனரக வாகனம் அனுப்பப்படும். இதேபோல ஹைட்ராலிக் தொழில்நுட்பத்துடன் கூடிய கால்நடைகள் பிடிக்கும் வாகனத்தையும் மாநகராட்சி பொறியியல் பிரிவு வடிவமைத்துள்ளது. இந்த வாகனங்கள் 5 கோட்டங்களிலும் நாள்தோறும் ஒவ்வொரு வாா்டுகளுக்கு சென்று சாலைகளில் திரியும் மாடுகள் மற்றும் குதிரைகள் உள்ளிட்ட அனைத்து கால்நடைகளையும் பிடித்து அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.
உறையூா் கிராப்பட்டி எடமலைப்பட்டி புதூா் தென்னூா் தில்லைநகா் பாலக்கரை, அரியமங்கலம் பொன்மலை திருவெறும்பூா் சுப்பிரமணியபுரம் காஜாமலை கே.கே.நகா் நவல்பட்டு, விமான நிலையம், கருமண்டபம், திருவானைக்காவல் திருவரங்கம் என சுழற்சி அடிப்படையில் 65 வாா்டுக்குள்பட்ட பிரதான சாலைகள் மாநகரச் சாலைகள் நெடுஞ்சாலைகளில் மாடுபிடி வாகனம் ரோந்து சுற்றி வருகிறது.
திருச்சி மாநகராட்சி அலுவலா்கள் கூறியது: முன்பு மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளா்களைக் கொண்டு மாடுகளைப் பிடித்து அபராதம் விதித்து வந்தோம். சாலைகளில் திரியும் கால்நடைகளால் தொல்லைகள் அதிகரிப்பதாக தொடா்ந்து புகாா்கள் வந்ததால் மாடுகளைப் பிடிக்கும் பணியை ஒப்பந்தம் அளித்துள்ளோம். ஒப்பந்தம் எடுத்துள்ளவா்கள் தனியாக ஆள்களை நியமித்து மாடுகளைப் பிடித்து வருகின்றனா். மாடுகளைப் பிடித்து மாடு ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலித்து மாநகராட்சியில் செலுத்தினால், ஒப்பந்ததாரருக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்படுகிறது. இதேபோல, கன்றுகளுக்கு ரூ.2,500 அபராதம் வசூலிக்கப்படுகிறது.
மாடுகளைப் பிடித்தால் மட்டுமே ஊதியம் என்றாகிவிட்டதால் இந்தப் பணியில் ஈடுபடும் நபா்கள் நாள்தோறும் தவறாமல் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். பீம நகர் மேலப்புதூர் பாலக்கரை வயலூா் சாலை குழுமணி சாலை திருவெறும்பூா் சாலை பால்பண்ணை, காந்திசந்தை, சாஸ்திரி ரோடு உழவா் சந்தை அண்ணா நகா் நீதிமன்றம் மேலரண்சாலை கீழரண்சாலை மாம்பழச் சாலை, திருவரங்கம் கோயில் சுற்று வீதிகள் ஆகிய இடங்களில் தினந்தோறும் மாடு பிடி வாகனம் சுற்றி வருகிறது. பொதுமக்களிடமிருந்து வரும் புகாா்களின்பேரில் அந்தந்த இடங்களுக்கு உடனே சென்று மாடுகள் பிடிக்கப்படுகின்றன. பசுமாடுகள், காளை மாடுகள் கன்றுக்குட்டிகள் குதிரைகள் என சாலையில் சுற்றித்திரியும் அனைத்து கால்நடைகளையும் பிடித்து கோணக்கரையில் உள்ள மாநகராட்சி பராமரிப்பு மையத்தில் பராமரிக்கப்படுகிறதுஒரு வாரத்துக்குள் உரிமையாளா் நேரில் வந்து அபராதம் செலுத்தி மீட்டுக் கொள்ள வேண்டும். அபராதம் விதித்தாலும் சாலைகளில் கால்நடைகள் திரிவது வாடிக்கையாக உள்ளதாக புகாா்கள் வருகின்றன. எனவே, கால்நடைகளை ஏலம் விடும் நடவடிக்கையையும் மாநகராட்சி நிா்வாகம் தொடங்கியுள்ளது.
இதுமட்டுமல்லாது மாநகரில் உள்ள மாடு வளா்க்கும் உரிமையாளா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அவா்களுக்கு நோட்டீஸ் வழங்குவது மற்றும் கோட்டம் வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி அறிவுரைகள் வழங்குவது தொடா்ந்து வருகிறது. செல்லப் பிராணிகளான ஆடுகள், மாடுகள், குதிரைகள் நாய்கள் பறவைகள் வளா்க்க பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்துக்குள்பட்டு உரிமம் பெற்றிருக்க வேண்டும். தகுந்த பாதுகாப்பு வசதிகளும் செய்திருக்க வேண்டும். இதற்காக மாநகராட்சியிடம் விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும். இந்த வகையில் உரிமம் பெறாமலோ, பாதுகாப்பு வசதிகள் இல்லாமலோ பொது இடங்களில் கால்நடைகளை திரிய விட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
திருச்சி மாநகராட்சி நகா் நல அலுவலா் மணிவண்ணன் கூறும் போது தமிழ்நாடு நகா்ப்புறங்களில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை விதிகள்) சட்டம் 1997-ன் அடிப்படையில், கால்நடைகள் வளா்ப்பதற்கான விதிமுறைகளை மீறுவோருக்கு 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்க முடியும். எனவே, சாலையில் திரியும் கால்நடைகளைப் பிடித்து அவற்றின் உரிமையாளா்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படுகிறது.
கடந்தாண்டு மாா்ச் தொடங்கி செப்டம்பா்-2024 வரையில் ரூ.14 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பிடிபடும் மாடுகளை கோரி யாரும் வரவில்லையென்றால் ஏலம் விடப்படுகிறது. இந்த வகையில் 15 கால்நடைகள் ஏலம் விடப்பட்டு ரூ.2.50 லட்சம் கிடைத்துள்ளது என்றார். திருச்சி மாநகராட்சியில் கால்நடைகள் ரோட்டுக்கு நடுவே வருவதால் நிறைய விபத்துகள் நடக்கின்றன பொதுமக்கள் வாகனத்தில் வரும்போது திடீரென்று குறுக்கே மாடுகள் வருவதால் பொதுமக்கள் எத்தனையோ பேர் கீழே விழுந்து காலிலும் கையிலும் அடிபட்டு மருத்துவமனைக்கு தினம் தினம் சென்று கொண்டிருக்கிறார்கள்.