பதுங்கு குழிகளில் இறங்கிய மக்கள்… உஷார் நிலையில் இந்திய எல்லையோர கிராம மக்கள்…!

ம்மு காஷ்மீரில் மக்கள் வசிக்கும் இடங்களை நோக்கி ஏவுகணைகளை வீசியது பாகிஸ்தான். இவற்றை வானிலேயே இடைமறித்து இந்திய ராணுவம் அழித்து கொண்டிருக்கிறது.

கூடவே ட்ரோன்களும், போர் விமானங்களும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.

சற்றுமுன் பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. மேலும் ஜெட் விமானம் ஒன்றும் இந்திய ராணுவத்தால் வீழ்த்தப்பட்டிருக்கிறது. எல்லையோர மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 24 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையில் ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியை ஒட்டி அமைந்துள்ள உரி, குப்வாரா, தங்தார், கர்னா ஆகிய செக்டார்களில் இரவு முழுவதும் பாகிஸ்தான் தாக்குதலை நடத்தி வருகிறது. சட்வாரி, சம்பா, ஆர்.எஸ்.புரா, அர்னியா ஆகிய பகுதிகளை நோக்கி 8 ஏவுகணைகளை பாகிஸ்தான் ஏவியது. இவை அனைத்தையும் இடைமறித்து இந்திய விமான பாதுகாப்பு படை அழித்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்படும் ட்ரோன்களும் வீழ்த்தப்பட்டு வருகின்றன

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் இந்திய ராணுவத்தின் தாக்குதல் வியூகம் ஆகியவற்றுக்காக கிஷ்ட்வார், அக்னூர், சம்பா, ஜம்மு, அமிர்தசரஸ், பிகானெர், ஜலந்தர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தாக்குதலால் போர் பதற்றம் ஏற்படும் என்று கருதி, நேற்றைய தினமே ஜம்மு மற்றும் காஷ்மீரில் வசித்து வரும் மக்கள் பதுங்கு குழிகள், பதுங்கு அறைகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.

தற்போது அடுத்தடுத்து தாக்குதல் நடந்து வருவதால் ஜம்மு காஷ்மீர் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சில கிராமங்களில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பதுங்கு குழிகள் இருக்கின்றன. ஆனால் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

எனவே எஞ்சிய மக்கள் மாற்று இடங்களில் தஞ்சமடையும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. உரி செக்டாரில் எடுத்து கொண்டால் 44 பதுங்கு குழிகள் இருக்கின்றன. இவை அரசால் உருவாக்கப்பட்டவை. மேலும் பொதுமக்கள் சார்பில் 22 பதுங்கு குழிகளும், இந்திய ராணுவத்தால் 3 பதுங்கு குழிகளும் உருவாக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.