சமூக வலைதளங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்களை பதிவிட்டு வந்ததை,டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார் கண்டறிந்தனர்.அவர்கள் திருப்பூரில் இருந்து பதிவிட்டு வந்தது தெரியவந்தது. திருப்பூர் வந்த டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார், மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் உதவியுடன் முகாமிட்டு விசாரணையை மேற்கொண்டனர்.

அப்போது பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் திருப்பூர் ஊத்துக்குளி, பல்லடம், திருமுருகன்பூண்டி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.ஊத்துக்குளி பகுதியில் பதுங்கியிருந்த 2 பேர், பல்லடத்தில் 3 பேர், திருமுருகன்பூண்டியில் ஒரு நபர் என 6 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் 6 பேரும் வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தொழிலாளர்கள் போர்வையில் திருப்பூருக்கு வந்த அவர்கள், பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டு, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளனர்.

வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் தொழி லாளர்கள் போர்வையில், போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன், திருப்பூருக்கு வந்து பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
திருப்பூர் போலீசார் தொடர்ந்து அதிரடி ஆய்வு நடத்தி, போலி ஆவணங்களுடன் தங்கியிருக்கும் வங்காளதேசத்தினரை கைது செய்து வருகின்றனர்.இன்று கைது செய்யப்பட்ட 6 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டெல்லி அழைத்து செல்லப்பட்டனர்.









