ஆஃப்கானிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் காபூல் மருத்துவமனை மீது, எந்தவித தாக்குதலையும் நடத்தவில்லை என பாகிஸ்தான் விளக்கமளித்துள்ளது.
திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் ஆஃப்கானிஸ்தானின் காபூலில் உள்ள, பெரிய போதைப்பொருள் சிகிச்சை மையத்தின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படும் மருத்துவமனையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அதன் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்து இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி குறைந்தது 400 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 250 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஆஃப்கானிஸ்தான் அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான மீட்பு பணிகள் முடிவுறும் சூழலில், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் துணை அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மருத்துவமனையின் பெரும் பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன. மீட்புக் குழுக்கள் தீயைக் கட்டுப்படுத்தவும், இடிபாடுகளில் இருந்து உடல்களை வெளியே எடுக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளன. உள்ளே இருந்தவர்களில் பெரும்பாலோர் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள்” என குறிப்பிட்டுள்ளார்.காபூலில் பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதல் ஒரு அத்துமீறல் மற்றும் மனிதநேயமற்ற செயல் என ஆஃப்கானிஸ்தான் அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், காபூலில் எந்த மருத்துவமனையையும் குறிவைத்து தங்கள் ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது. பிரதமர் ஷெ ஷெரீப்பின் செய்தித் தொடர்பாளர் மொஷாரஃப் ஜைதி, பாகிஸ்தான் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறினார். காபூல் மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள உபகரணங்கள் மற்றும் வெடிமருந்து சேமிப்பு தளங்கள் உட்பட “ராணுவ நிறுவல்கள் மற்றும் பயங்கரவாத ஆதரவு உள்கட்டமைப்பு” மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தானின் தகவல் அமைச்சகம் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தாக்குதல் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி வருவது, உடல்கள் சிதறி உயிரிழந்து கிடந்தோரை மீட்பு படையுடனரும் சேர்ந்து பொதுமக்களும் அப்புறப்படுத்திய காட்சிகள் நெஞ்சை உலுக்குகின்றன. உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கான சிகிச்சை பெற்று வருபவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில வாரங்களாகவே ஆஃப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்குள் தாக்குதல்களை நடத்தும் ஆயுதக் குழுக்களுக்கு ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசாங்கம் அடைக்கலம் அளித்து வருவதாக கூறி இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இஸ்லாமாபாத்தின் குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் ஆஃப்கானிஸ்தானும், ராணுவ நடவடிக்கை மூலம் தக்க பதிலடியை அளித்து வருகிறது.







