கோவை மாவட்டம் மதுக்கரையில் செயல்படும் சிமெண்ட் தொழிற்சாலை, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தனர். சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு புகையிலிருந்து சிமெண்ட் துகள்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், மரம், செடி, கொடிகள் என அனைத்திலும் படிவதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர், அந்த சிமெண்ட் தொழிற்சாலை மற்றும் சுற்றி இருக்க கூடிய பகுதிகளில் ஆய்வு நடத்த, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தனியார் தொழிற்சாலை அமைந்திருக்கும் மதுக்கரை, குரும்பபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், காற்றில் கலந்துள்ள தூசு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்பை அளப்பதற்கான கருவிகளை பொருத்தி ஆய்வு மேற்கொண்டனர். இதில் மாசு அளவு, நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக இருப்பது தெரிய வந்தது. சராசரியாக காற்றின் தர அளவு 100-க்குள் இருக்க வேண்டும், ஆனால் மதுக்கரை, குரும்பபாளையம் பகுதியில் காற்றின் தர அளவு 150 முதல் 200-க்குள் இருப்பது தெரியவந்தது. காற்றின் சுகாதார குறியீடு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் 4-6க்குள் இருந்தது. காற்றை மாசுபடுத்தும் துகள், மாசு அளவும் அதிகரித்து, காற்றின் தரத்தை மேலும் மோசம் அடையச் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு விளக்கம் கேட்டு, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். சிமெண்ட் தொழிற்சாலை உற்பத்தியை தற்காலிகமாக வரும் அக்டோபர் 1 முதல் நிறுத்துமாறு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். எச்சரிக்கையை மீறி தொழிற்சாலை இயங்கினால், மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
சிமெண்ட் தொழிற்சாலையை மூட உத்தரவு – மதுக்கரை மக்கள் மகிழ்ச்சி ..!!
