விளையாட்டிலும் ஆபரேஷன் சிந்தூர்… பாகிஸ்தானை தோற்கடித்த இந்திய அணிக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி.!!

டெல்லி: ஆசிய கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது. 18 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் மைதானத்திலும் ஆபரேஷன் சிந்தூர் என்று பிரதமர் மோடி பதிவிட்டு இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இதில் துபாயில் இன்று இறுதிப்போட்டி நடந்தது. பரம எதிரிகளான இந்தியா பாகிஸ்தான் இடையே இந்த போட்டி நடைபெற்றது.

ஏற்கனவே ஆசிய கோப்பை தொடரில் லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 பிரிவில் இரு அணிகளும் மல்லு கட்டின. இதில், இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது. இதன் காரணமாக இன்று நடைபெறும் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தட்டி சென்றது.

18 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை இந்திய அணி பெற்றுள்ளது. இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மோடியும் இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் ஆபரேஷன் சிந்தூர்.. விளைவு ஒன்று தான்.. இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டுக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா துல்லிய தாக்குதலை மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

தொடர்ந்து இந்தியா நடத்திய தாக்குதலால் தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு கெஞ்சியது. இதையடுத்து இந்தியா பாகிஸ்தான் மீதான தாக்குதலை கைவிட்டது. இந்தியாவின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க நினைத்தால் ஆபரேஷன் சிந்தூர் மீண்டும் தொடரும் என்று இந்தியா எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் தான் கிரிக்கெட் விளையாட்டிலும் ஆபரேஷன் சிந்தூர் என்று மோடி பதிவிட்டுள்ளார்.

இன்று துபாயில் நடந்த இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் நின்று நிதானமாக ஆடியது. ஆனால் போக போக விக்கெட் மளமளவென சரிந்தது.

இதனால் பாகிஸ்தான் அணியால் 19.1 ஓவரில் 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால் ஆரம்பத்தில் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது.

இருந்த போதிலும் நடு வரிசையில் களமிறங்கிய வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ரன் ரேட் மளமளவென உயர்ந்தது. திலக் வர்மா மற்றும் ஷிவம் துபே பாகிஸ்தானின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இதனால் ரன் மளமளவென வேகமாக உயர்ந்தது.

தொடர்ந்து இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதோடு ஆசிய கோப்பையும் வென்றது. இதன் மூலமாக 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளது.