பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத இலக்குகள் மீது இந்திய ராணுவம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளமான பஹாவல்பூர் உட்பட முக்கிய பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, இந்தியா S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை செயல்படுத்தியுள்ளது. இந்திய விமானப்படையின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாக S-400 ஏவுகணை அமைப்பு கருதப்படுகிறது. இந்த வான் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவைக் குறிவைத்து நடத்தப்படும் எந்தவொரு வான் தாக்குதலையும் முறியடிக்கும் திறன் கொண்டது.
குறிப்பாக சீனா மற்றும் பாகிஸ்தானை மனதில் கொண்டு S-400 ஏவுகணை அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை அமைப்பின் வரம்பு 40 கி.மீ. முதல் 400 கி.மீ. வரை இருக்கும்.
இந்த S-400 ஏவுகணை தொழில்நுட்பத்திற்கான ஒப்பந்தம், அக்டோபர் 2018 இல் ரஷ்ய அதிபர் புடினின் இந்திய வருகையின்போது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே கையெழுத்தானது. தற்போது, இந்த ஏவுகணை தொழில்நுட்பம் உலகின் மிக சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்பாகக் கருதப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவுடன் பேசி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார் என்று வாஷிங்டன் டிசியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற திட்டத்தைத் தொடங்கியது.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பரவலான பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனக் குரல்கள் எழும்ப வழிவகுத்தது.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் போர் விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாகவும், 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 60 பயங்கரவாதிகள் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.