பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நள்ளிரவு முதல் இந்திய முப்படைகளும் ஒருங்கிணைந்த தாக்குதலை தொடங்கியுள்ளன.
இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த பதிலடி தாக்குதல்கள் எங்கே? எந்த முறையில் நடத்தப்படுகிறது.
.ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 அன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம், காரணம் என்று ஆதாரங்கள் மூலம் தெரியவந்திருப்பதாக இந்திய அரசு கூறியதை பாகிஸ்தான் மறுத்த போதிலும், இரு நாட்டு எல்லைகள் மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, வர்த்தக உறவு முறிவு என பாகிஸ்தானுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது.மேலும் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்பதற்கு இந்திய ராணுவம் திட்டமிட்டு வந்தது. இதனால் இன்று நாடு முழுவதும் 244 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று நள்ளிரவு பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளன.’ஆபரேஷன் சிந்தூர்’பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முஹம்மது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் பதிலடி தாக்குதலை தொடங்கி இருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகம் உள்ள முரித்கேரி மற்றும் அந்த அமைப்பு செயல்படும் பர்னாலா, முஷாஃபராபாத், ஜெய்ஷ்-இ-முஹம்மது பயங்கரவாத அமைப்பு செயல்படும் பஹவல்பூர், தெஹ்ர் காலன், கோட்லியில் இரு இடங்கள், முஷாஃபராபாத் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பு செயல்படும் கோட்லி, சிகல்கோட் பகுதிகல் என மொத்தம் 9 இடங்களில் இந்திய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதில் 4 இடங்கள் பாகிஸ்தானிலும், 5 இடங்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் உள்ளன.
ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் கீழ் அதிகாலை 1.44 மணிக்கு ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்திய படைகள் தாக்கின. அங்கிருந்துதான் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு இயக்கப்பட்டன.
இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளின் துல்லியத் தாக்குதல் ஆயுத அமைப்புகள் இந்த தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டன.
இதில் காமிகேஸ் (Kamikaze) ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை அலைந்து திரியும் வெடிமருந்துகள் என்றும் அழைக்கப்படுகின்றன . இலக்கை நோக்கி மோதுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஆயுதங்கள் இவை.
பாகிஸ்தான் ராணுவ நிலைகள் எதுவும் குறிவைக்கப்படவில்லை என்றும் இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும், செயல்படுத்தும் முறையிலும் இந்தியா நிதானத்தைக் காட்டியுள்ளது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது..
குறிவைக்கப்பட்ட 9 இடங்களில் பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகமும், முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகமும் அடங்கும்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்குவதாக சூளுரைத்த பிரதமர் நரேந்திர மோடி, இரவு முழுவதும் இந்த நடவடிக்கையை கண்காணித்தார்.
இந்த நடவடிக்கைக்குப் பிறகு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுடன் பேசி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விரிவான விளக்கம் இன்று அளிக்கப்படும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.