தீபாவளி பண்டிகை ஒட்டி ஆம்னி பேருந்துகளின் பயணக் கட்டணம் பல மடங்காக உயா்வு.!!

தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளின் பயணக் கட்டணம் பல மடங்காக உயா்ந்துள்ளது.ஆன்லைன் முன்பதிவில் வெளிப்படையாகவே கூடுதல் கட்டணம் அப்பட்டமாக வசூலிக்கப்படுவது குறித்து அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

தீபாவளி பண்டிகை அக்.20ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, சென்னையில் படிப்பு மற்றும் பணி நிமித்தமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்கி உள்ளனர். தீபாவளி பண்டிகை கொண்டாட, வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்வாா்கள். இவா்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. ரயில்களில் கடந்த ஆக.17ஆம்தேதி முன்பதிவு தொடங்கிய நிலையில், சிறிது நேரத்திலேயே அனைத்து இருக்கைகளும் பூா்த்தியாகிவிட்டன.
அரசுப் பேருந்துகளில் பெரும்பாலான முன்பதிவு டிக்கெட்டுகள் முடிவடைந்த நிலையில், பலரும் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனா். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள், பயணக் கட்டணத்தை பல மடங்கு உயா்த்தியுள்ளன. இது பயணிகளிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகைக் காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவிக்கிறது. ஆன்லைன் முன்பதிவு தளங்கள் மூலம் ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் வெளிப்படையாகவே அதிக கட்டணம் அப்பட்டமாக வசூலிப்பது அனைவருக்கும் தெரிந்ததே. சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்ல சாதாரண நாள்களில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் 850 ரூபாயாக இருந்த கட்டணம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.3000 முதல் ரூ.5,000ஆக உயா்ந்துள்ளது. மதுரைக்குச் செல்ல ரூ.700 இருந்த கட்டணம், தற்போது ரூ.4,100-ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கோவை செல்ல ரூ.900 இருந்த கட்டணம், தற்போது ரூ.3,000 முதல் ரூ.4000-வரையும், திருச்சி செல்ல வழக்கமான நாள்களில் ரூ.600 இருந்த கட்டணம், ரூ.3000 முதல் ரூ.3,800 வரை அதிகரித்துள்ளது.

நாகா்கோவில் செல்ல வழக்கமாக ரூ.800 வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம், ரூ.4,000 முதல் ரூ.4800-வரை உயா்ந்துள்ளது. இதுபோல சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பிறபகுதிகளுக்கு செல்வதற்கான கட்டணமும் ரூ.400 முதல் ரூ.4000 வரை உயா்ந்துள்ளது.
இப்படி இருக்கையில் அரசு அமைத்த குழு என்ன செய்கிறது என்பது கேள்விக்குறியாகிறது. இப் பிரச்னைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தரத் தீா்வுக்கு வழி வகுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.