தமிழகம் உட்பட நாடு முழுவதும் துள்ளிய அளவில் ரேஷன் பொருட்களை வழங்கவும், பொதுமக்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும் ATM வழியே உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு தடையின்றி, வெளிப்படைத்தன்மையுடன் ரேஷன் பொருட்களை வழங்கும் நோக்கில் இந்திய அரசு ‘அன்னபூர்த்தி’ எனும் உணவு பொருட்களை விநியோகிக்கும் ஏடிஎம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் (World Food Programme) மற்றும் இந்தியாவின் உணவுப் பாதுகாப்புத் துறை இணைந்து இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன.
வழக்கமாக செயல்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருப்பது, ஊழியர்களின் விடுமுறை காரணமாக பொருட்கள் கிடைப்பதில் தாமதம், எடையில் முறைகேடுகள் மற்றும் தரம் குறைந்த பொருட்கள் வழங்கப்படுவது போன்ற புகார்களைத் தீர்ப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
இந்த உணவு பொருள் விநியோகிக்கும் ஏடிஎம் இயந்திரமானது ஒரு சிறிய வங்கி ஏடிஎம் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்முறை நான்கு முக்கிய நிலைகளைக் கொண்டது:
பயனாளிகள் இயந்திரத்தில் உள்ள திரையில் தங்களது ரேஷன் கார்டு எண் அல்லது ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
முறைகேடுகளைத் தவிர்க்க, விரல் ரேகை (Biometric) அல்லது கண் விழித்திரை (Iris scan) மூலம் பயனாளியின் அடையாளம் உறுதி செய்யப்படுகிறது.
பயனாளிக்கு மாதம் எவ்வளவு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதோ, அந்தத் தகவல் திரையில் தோன்றும். பயனாளி தனக்குத் தேவையான அளவைத் தேர்ந்தெடுக்கலாம்.
இயந்திரத்தின் கீழ் பகுதியில் பையை வைத்தால், சில வினாடிகளில் தானியங்கள் (அரிசி, கோதுமை அல்லது பருப்பு) துல்லியமான எடையில் வழங்கப்படும்
ஒரு இயந்திரம் ஒரு நிமிடத்திற்கு சுமார் 25 கிலோ முதல் 50 கிலோ வரை தானியங்களை வழங்கும் திறன் கொண்டது. இதனால் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை.
இயந்திரக் கட்டுப்பாட்டில் பொருட்கள் வழங்கப்படுவதால், எடையில் ஒரு கிராம் கூட குறைபாடு ஏற்படாது. இது 99.9% துல்லியமானது.
வங்கி ஏடிஎம்களைப் போலவே, இந்த இயந்திரங்களையும் 24 மணிநேரமும் பயன்படுத்த முடியும். பகல் நேரங்களில் வேலைக்குச் செல்பவர்கள் இரவு நேரங்களில் தங்களுக்குத் தேவையான ரேஷன் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தியாவின் முதல் தானிய ஏடிஎம் ஹரியானா மாநிலம் குருகிராமில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, ஒடிசா, உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இது நடைமுறைக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் முறையும், செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டமும் அமலில் உள்ளன. தானிய ஏடிஎம் இயந்திரங்களை மாநிலம் முழுவதும் படிப்படியாக அறிமுகப்படுத்த தமிழக உணவுத் துறை ஆய்வு செய்து வருகிறது. இத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும் பட்சத்தில் பயனாளர்கள் தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை துள்ளியமான அளவில் மிகக்குறைந்த நேரத்தில் பெற்றுக் கொள்ளலாமென நம்பப்படுகிறது.







