ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: தமிழக அரசின் மேல்முறையீடு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு..!

டெல்லி: ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கின் விசாரணையில், விளையாட்டு நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ச்சியாக பல லட்சம் பணத்தை இழந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், பிளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 3ம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. அதனால் போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி சட்டத்தை ரத்து செய்தது.

ஆனால் உரிய சட்ட விதிகளுடன் புதிய சட்டம் கொண்டுவர அரசுக்கு எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை முறையாக பரிசீலிக்காமல் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதுபோன்ற சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். இதனைத்தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனங்கள் 4 வாரங்களில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.