தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது தயாராகி வருகிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதன்படி, “அக்டோபர் 16 முதல் 18ம் தேதிக்குள் பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கும் வாய்ப்பு உள்ளது.
இதன் அடிப்படையில், வளிமண்டலத்தில் கிழக்குத் திசை காற்று நாளைக்குள் (புதன்கிழமைக்குள்) வீசத் தொடங்கும் எனவும், அதுவே பருவமழையின் தொடக்கத்துக்கான அறிகுறியாகும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, “பருவமழை துவங்கியவுடன், நாளை முதல் 21ம் தேதி வரை (ஒரு வாரம்) தமிழகத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். எனினும், இது மிகுந்த பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு அல்ல” என்று தெரிவித்துள்ளார்.மேலும், மழை நேரங்களையும் அவர் விரிவாக விளக்கியுள்ளார்.
அவர் ,”கடலோர மாவட்டங்களில் அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மழை பெய்யக்கூடும்.உள்மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.ஓரிரு இடங்களில் கனமழையும் பதிவாகலாம்.மேலும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) குமரிக்கடல் பகுதியில் காற்றுசுழற்சி உருவாகி, 17 மற்றும் 18ம் தேதிகளில் அது லட்சத்தீவு கடல் பகுதியில் தாழ்வுப் பகுதியாக மாறி வலுவடைந்து, பின்னர் அரபிக்கடலை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தாக்கமாக மேற்கு மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும்.தொடர் கனமழைக்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும், விவசாயிகள் மற்றும் பண்டிகைக்கால வியாபாரிகள் சற்று சிரமத்தை எதிர்கொள்ள நேரிடலாம்” என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.