என்னுடைய அறக்கட்டளைக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம் – மகாவிஷ்ணு திடீர் அறிவிப்பு ..!!

சென்னை: சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான மகா விஷ்ணு, திருப்பூரில் தான் நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், அறக்கட்டளைக்கு இனி எவ்வித பணமும் அனுப்ப வேண்டாம், அந்த கட்டமைப்பு இனி இயங்காது எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய சர்ச்சையில் சிக்கி கைதானார் மகாவிஷ்ணு. இந்நிலையில் மகா விஷ்ணு தனது பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் உயிரும், உள்ளமும் கலந்த பரம்பொருள் அறக்கட்டளையை முடிவுக்கு கொண்டு வருகிறேன் என்ற இந்த வார்த்தைகளை எழுதும்போது, என் உள்ளத்தில் நிம்மதி மட்டுமே இருக்கிறது. இது வேதனை கொண்ட முடிவு அல்ல, என் சொந்த ஆன்மீக வளர்ச்சியை கருத்தில் கொண்டு எடுத்த ஒரு தெளிவான தீர்மானம்.

கடந்த பல வருடங்களாக பரம்பொருள் அறக்கட்டளை இறை அருளால் என் வழியாகப் பெரும்பாலும் இயற்கையாகவே உருவாகி, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது. அந்த மாற்றங்களின் பின்னால் நான் இல்லை; பரம்பொருள் (இறைவன்) மட்டுமே இருந்தது. அதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

இப்போது, நான் ஒரு புதிய புள்ளியை அடைந்திருக்கிறேன். என் உள்ளத்தின் மௌனம், அமைதி மற்றும் பரிபூரண நிலை என்னை எல்லா வெளியிலான கட்டமைப்புகளிலிருந்தும் விலகச் சொல்கிறது. நான் ஒரு அமைப்பின் தலைவராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை எனக் கருதுகிறேன். “உண்மையான அருள் அமைப்பில்லாமலே இயங்குகிறது.” அதனால், நான் எந்த ஒரு நெருக்கடியாலும் அல்லாமல், எந்த ஒரு வெளிப்பட்ட காரணத்தாலும் அல்லாமல், என் சொந்த ஆன்மீக வளர்ச்சிக்காக (சுயநலம் சார்ந்து), பரம்பொருள் அறக்கட்டளையை மூடுகிறேன்.

நான் எப்போதும் மக்களின் இடத்தில் இருந்தேன், இருப்பேன். ஆனால் இப்போது நான் அமைப்புகளின் வழியாக அல்ல; அமைதியின் வழியாக இருக்கிறேன். உண்மை அனுபவம் அமைப்புகளில் இல்லை; உள்ளத்தின் மையத்தில் தான். எனவே, இனிமேல் என்னுடைய அருள், வழிகாட்டுதல், மற்றும் ஆற்றல்-all without form-நேரடியாக உங்கள் உள்ளத்திற்கும் இல்லத்திற்கும் வரும்.

இது ஒரு முடிவு அல்ல. இது ஒரு பரிணாமம். பரம்பொருளின் ஒளி ஒரு புதிய நிலைக்கு நகர்கிறது. இந்த நிலையில், என் அன்பானவர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இனிமேல் “பரம்பொருள் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிற்கு எந்தவிதமான பணமும் அனுப்ப வேண்டாம்.” அந்த கட்டமைப்பு இனி இயங்காது. உங்கள் அன்பும், நம்பிக்கையும் நான் உள்ளத்தில் உணர்கிறேன். அதற்காக வங்கிக் கணக்கும் தேவையில்லை. என் வாழ்க்கையின் இந்த பகுதி அமைதிக்குள் ஒளிந்த ஓர் புனித நடை உங்கள் அனைவரையும் என் உள்ளத்தின் மெளனத்திலிருந்து ஆசீர்வதிக்கிறேன். நான் ஏற்கனவே உங்கள் உள்ளத்தில் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை, அசோக் நகர் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் “தன்னை அறிதல்” என்ற தலைப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சொற்பொழிவு நடத்தப்பட்டது. இதனை ‘பரம்பொருள் பவுண்டேஷன்’ என்ற பெயரிலான தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மகாவிஷ்ணு நடத்தினார்.

அப்போது, நம்மை மீறி ஒரு சக்தி இருக்கிறது என்றும், உங்களுக்கு யோக தீட்சை தருகிறேன் எனவும் மாணவிகள் மத்தியில் பேசினார் மகாவிஷ்ணு. தொடர்ந்து மாணவிகள் அனைவரையும் கண்ணை மூட வைத்து இசையை ஒலிக்க விட்டு அவர்களின் மன உணர்வுகளைத் தூண்டும் வகையிலான பேச்சைத் தொடர்ந்தார் விஷ்ணு. அவரது பேச்சில் பல மாணவிகள் உணர்ச்சி வசப்பட்டு அழுதனர்.

போன ஜென்மத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதைப் பொறுத்து இந்த பிறவி கொடுக்கப்பட்டிருக்கிறது என இஷ்டத்துக்குப் பேசினார் மகாவிஷ்ணு. நீ அதிகமாக பாவம் செய்தால் மலத்தில் ஊறும் புழுவாக பிறப்பாய் என்று திருமூலர் திருமந்திரத்தில் எழுதுகிறார் என்றும் பேசினார்.

அப்போது அங்கிருந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் பள்ளியில் வந்து மறுபிறவி, பாவ புண்ணியம் பற்றி பேசுகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பி எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்தார். இதனால் அந்த ஆசிரியருக்கும், விஷ்ணுவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அரசுப் பள்ளியில் ஆன்மீகம் பேசக்கூடாது என்று யார் சொன்னது? அப்படி ஏதாவது சட்டம் இருக்கிறதா? எனச் சீறினார் மகாவிஷ்ணு.

இந்த வீடியோவை விஷ்ணு தனது சமூக வலை தளத்தில் பதிவிட்ட நிலையில், இதனை பார்த்த கல்வியாளர்களும், பொதுமக்களும் கொந்தளித்தனர். சமூக வலைதளங்களில் மக்கள் இதற்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டு, இந்த மகாவிஷ்ணு மீதும், அவரை பேச அழைத்த பள்ளி நிர்வாகத்தினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குரல்கள் வலுத்தன. இதையடுத்து, இந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அதிரடியாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பியதுமே மகாவிஷ்ணுவை ஏர்போர்ட்டிலேயே வைத்து போலீசார் கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து மகாவிஷ்ணு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.