திண்டிவனம்: பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் கடந்த 13ம் தேதி தனது தனி செயலாளராகவும் மற்றும் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் சுவாமிநாதன் என்பவரை நியமித்தார்.மேலும் இவருக்கு கட்சியில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை செயலாளர்கள், பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு ராமதாஸ் உத்தரவிட்டிருந்தார். ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி இருந்தபோது அவருக்கு தனி செயலாளராக இருந்தவர்தான் சுவாமிநாதன். இந்நிலையில் அன்புமணி நேற்று திடீரென அவரது எக்ஸ்தளம் பக்கத்தில் ‘எனது முன்னாள் உதவியாளர் சுவாமிநாதனுடன் கடந்த 3 ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சியினரும், எனது நலம் விரும்பிகளும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.இந்த திடீர் உத்தரவின் மூலம் தந்தை ராமதாசை முழுமையாக தனிமைப்படுத்தும் வகையிலேயே அன்புமணி செயல்பட்டு வருகிறார் என்று கட்சி நிர்வாகிகள் பரபரப்பாக பேசி வருகின்றனர். மேலும் சுவாமிநாதன் வந்ததிலிருந்து தோட்டத்தில் உள்ள நடவடிக்கைகளை அன்புமணியால் முழுமையாக கண்காணிக்க முடியவில்லை. இப்படியே விட்டால் கட்சியினர் அவரிடம் தொடர்பு கொண்டால் ராமதாசிடம் எளிதில் சென்று விடுவார்கள் என்ற அச்சத்தில் தான் தற்போது அன்புமணி இந்த பதிவை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ராமதாசால் தனி செயலாளராக நியமிக்கப்பட்டவர் முன்னாள் உதவியாளருடன் யாரும் எந்த தொடர்பும் வைக்க கூடாது: அன்புமணி
