உணவுப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தேவையான உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உரிமைகள் மற்றும் பதிவு சான்றிதழ்கள் இனி நிரந்தரமாக செல்லும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதாவது, இனி குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை சான்றிதழ் பெற்றாலே, அது நிரந்தரமாக செல்லும் என்றும், உணவு சார்ந்த தொழில்கள் செய்வதை எளிதாக்கவே இந்த சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ விடுத்துள்ள அறிக்கையில், “இந்த சீர்திருத்தத்தால் உணவு தொழில்முனைவோர் அடிக்கடி அரசு அலுவலகங்களுக்கு அலையவேண்டிய சுமை குறையும். வருவாய் வரம்பு உயர்வை பொறுத்தவரை, ஆண்டு வருவாய் வரம்பு ரூ. 12 லட்சத்தில் இருந்து 1.5 கோடியாக உயர்த்தப்படுகிறது. இந்த நடைமுறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும். இதன் மூலம் சிறு, குறு நிறுவனங்களுக்கான விதிமுறைகள் குறைந்து, எளிமையாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







