அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தின் இந்திய கொள்கை மற்றும் பொருளாதார ஆய்வு கிளப் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இந்திய மாணவர்களிடம் பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை பேசியதாவது: அமெரிக்காவின் அரிசோனா பல்கைலைக்கழகத்தில் படிக்கும் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்.
இங்கு உலகளாவிய அறிவை உங்களால் பெற முடியும். படிக்கும் காலத்தில் நாம் அடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளுக்கான வாழ்க்கைக்கு நம்மை தயார் செய்வது முக்கியம். இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
தொழில்துறை வளர்ந்து கொண்டிருக்கிறது. ஸ்டார்ட் அப் தொழில் துறையில் நாம் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளோம். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என உலகம் முழுவதும் இந்திய மாணவர்கள் அதிகளவில் உள்ளனர். 2047-ம் ஆண்டில், நாம் 34 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டவுள்ளோம்.
நீங்கள் இங்கு நன்றாக படியுங்கள், உங்களை முழுவதுமாக தயார் படுத்திக் கொள்ளுங்கள், நீங்கள் படித்துக் கொண்டிருக்கிற நாட்டை மதிக்க வேண்டும். இந்த நாடு பலருக்கு வாய்ப்பளிக்கிறது. நீங்கள் தாய்நாடு திரும்பும்போது இந்தியா-அமெரிக்கா இடையேயான கலாச்சார தூதுவர்களாக இருக்க வேண்டும்.
இந்தியாவும், அமெரிக்காவும், உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறது. நீங்கள் எங்கிருந்தாலும், என்ன செய்தாலும், உங்களின் ஒரே வீடு இந்தியாதான். அங்குதான் உங்களின் வேர் உள்ளது. அதை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். நாளைக்கு உங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், இந்தியா உங்களுக்கு முதலில் வந்து உதவும். நாம் இருக்கும் நாட்டை மதிக்க வேண்டும், அதே நேரத்தில் நமது வேரை மறக்க கூடாது.
காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் மிக சோகமானது. மும்பை தீவிரவாத தாக்குதல் நடந்தபோது, நமது உளவுத்துறை வலுவாக இல்லை. ஆனால், தற்போது உளவுத்துறையின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது. எல்லை வழியாக நுழைந்து தாக்கிவிட்டு தீவிரவாதிகள் எளிதில் தப்பிச் சென்றுள்ளனர். காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர், மாணவர் விசாவில் பாகிஸ்தான் சென்று 7 ஆண்டுகளாக நாடு திரும்பவில்லை.
அவரை பாதுகாப்பு படையினர் சில காலம் மட்டுமே கண்காணிக்க முடிந்தது. அவர் 6 தீவிரவாதிகளுடன் வந்து தாக்குதலை நடத்தியுள்ளார். இப்பிரச்சினைக்கு நமது பாதுகாப்பு படைகளும், அரசியல் தலைவர்களும் தீர்வு காண்பர். நமது பிரதமர் அவர்களுக்கு சரியான பாடம் கற்பிப்பார்.
இது போன்ற தாக்குதல், நாகரீக போராக இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்றுள்ளது. இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் பலர் வாராணசியில் இந்து கோயில்களை பலவற்றை தொடர்ந்து இடித்துள்ளனர். இப்பிரச்சினைக்கு ஒரே நாளில் தீர்வு ஏற்படபோவதில்லை. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.