ரேஷன் கார்டு என்பது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் அட்டை ஆகும்.
தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் மொத்தமாக 35,083 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் 2 கோடியோ 25 லட்சத்து 24 ஆயிரத்து 784 குடும்ப அட்டைகள் உள்ளன. இதன் மூலம் 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ரேஷன் கடைகளில் இலவசமாகவும் மலிவு விலையிலும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற உணவுப் பொருட்களை வாங்கி வருகிறார்கள். இதுமட்டுமில்லாமல், பொங்கல் பரிசு தொகுப்பு, மகளிர் உரிமைத் தொகை போன்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
ரேஷன் கார்டு மூலம் பொருட்கள் மலிவு விலையிலும் இலவசமாகவும் வழங்கப்படுவதோடு மட்டுமல்லாமல் மத்திய, மாநில அரசின் மற்ற திட்டங்களின் கீழ் உதவி பெறுவதற்கும் ரேஷன் கார்டு அவசியம்.
அதுமட்டும் இல்லாமல் ரேஷன் கார்டில் இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்பவே இலவச அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களும் விநியோகம் செய்யப்படுகிறது. இதனாலேயே பலரும் புதிய ரேஷன் கார்டு வாங்கவும், குடும்பத்தில் விடுபட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்களையும் சேர்க்கவும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அடிக்கடி அதில் அப்டேட் செய்ய வேண்டியிருக்கும். பெயர் நீக்கம், பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச் செய்ய வேண்டியிருக்கும். இந்த அப்டேட்களை உடனுக்குடன் செய்யாவிட்டால் தொடர்ந்து ரேஷன் உதவிகள் கிடைக்காமல் போகலாம்.
2025-ம் ஆண்டு அரசு ஆய்வுகளின்படி, சுமார் 3 கோடி போலி அட்டைகள் அடையாளம் காணப்பட்டன. இது ஆண்டுக்கு ரூ.20000 கோடி இழப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நாளை முதல் (ஏப்ரல் 1-ம்தேதி) ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு சில புதிய கட்டுப்பாடுகளையும் மாற்றங்களையும் தமிழக அரசு அமல்படுத்தவுள்ளது.
முதலாவதாக ரேஷன் கார்டுகளுக்கு e-KYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து அட்டைத்தாரர்களும் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக ரேஷன் பொருட்களை வாங்காத ரேஷன் அட்டைத்தாரர்களை கண்டறிந்து அவற்றை செயலற்ற நிலைக்கு மாற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. குறிப்பாக 6 மாதங்களுக்கு மேல் ஒருமுறை கூட பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் போலியானவை எனக் கருதப்பட்டு ரத்து செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஏப்ரல் 1) முதல் அத்தகைய ரேஷன் அட்டைத்தாரர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று கைரேகையைப் பதிவு செய்து ரேஷன் கார்டைப் புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படி செய்யாதபட்சத்தில், அடுத்தடுத்த மாதங்களில் இருந்து அந்த அட்டைத்தாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என்று கூட்டுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
இரண்டாவது ரேஷன் ஸ்மார்ட் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்கள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இணைக்கப்படாத அட்டைகள் இன்றுடன்(மார்ச் 31) செயலிழக்கும். சிலரது ரேஷன் கார்டுகளில் இறந்தவர்களின் பெயர்கள் அல்லது வெளியூர் சென்றவர்களின் பெயர்கள் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது. அவர்கள் சிறப்பு முகாம்கள் அல்லது ரேஷன் கடைகளிலும் பெயரை நீக்க வேண்டும். இது தொடர்பான குறுஞ்செய்திகள் ஏற்கனவே பலரது மொபைல் எண்களுக்கு வரத் தொடங்கியுள்ளன..
மூன்றாவதாக வரும் ஏப்ரல் மாதத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 3 மாதங்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் ஒன்றாக வழங்கப்படுமென மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கான கோதுமை மற்றும் அரிசி போன்றவற்றை பயனாளிகள் ஏப்ரல் மாதத்திலேயே ஒட்டுமொத்தமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.சமீபகாலமாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் எடை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்யப் டிஜிட்டல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கிய பிறகு ஒவ்வொரு அட்டைத்தாரர்களுக்கும் உடனடியாக மொபைலில் அவர்கள் வாங்கிய பொருட்களுக்கான ரசீது வருவதும் நடைமுறையில் வந்துள்ளது.
அதேபோல் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு'(ONORC) திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 28 மாநிலங்களில் 80 கோடி பேர் எங்கு வேண்டுமானதும் ரேஷன் பெறலாம்.கோடைக்காலத்தில் நிலவக்கூடிய கடும் வெப்ப அலைகளின் போது பொதுமக்கள் ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று சிரமப்படுவதைத் தவிர்க்க ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்திலும் சிறு மாற்றங்கள் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.








