நகரங்களில் உற்பத்தி மையங்களில் இருந்து அருகில் உள்ள சந்தைகளுக்கு மீன்களை அனுப்பி வைக்க ட்ரோன்களை பயன்படுத்த வேண்டும் என்று மீன்வளத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பிரதமா் மோடி அறிவுறுத்தினாா்.
இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ஆழ்கடல் மீன்பிடித்தல் மற்றும் கடல் உணவு ஏற்றுமதிகளை மையமாகக் கொண்டு, தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் மீன்வளத் துறையின் முன்னேற்றம் மற்றும் வருங்கால திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது மீன்வளத் துறையில் தனியாா் துறை முதலீடு செய்வதற்கு வழிவகை செய்வது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பிரதமா் மோடி பேசுகையில், நகரங்களில் உற்பத்தி மையங்களில் இருந்து அருகில் உள்ள சந்தைகளுக்கு மீன்களை அனுப்பிவைக்க ட்ரோன்களை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினாா். அவ்வாறு மீன்களை ட்ரோன்களில் அனுப்பிவைப்பதை விமான போக்குவரத்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தும், தொழில்நுட்ப நெறிமுறைகளைப் பின்பற்றியும் செய்ய வேண்டும் என்று அவா் அறிவுறுத்தினாா்.
வேளாண் துறையில் வேளாண் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது போல, மீன்வளத் துறையிலும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினாா். பொலிவுறு துறைமுகங்கள் மற்றும் சந்தைகள் மூலம் மீன்வளத் துறையை நவீனப்படுத்த வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தினாா் என்று தெரிவிக்கப்பட்டது.