காட்டூர் காவல் நிலையத்துக்கு ரூ.30 கோடியில் புதிய கட்டிடம்- போலீஸ் கமிஷனர் தகவல்..!

கோவை காந்திபுரத்தில் சிறைத்துறை மைதான பகுதியில் ரூ. 300 கோடியில் பெரியார் நூலகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் நுழைவு வாயில் காட்டூர் காவல் நிலைய பகுதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே காட்டூர் காவல் நிலையம் ,உதவி கமிஷனர் அலுவலகம், மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து புலனாய்வுத்துறை காவல் நிலையம், ஆகியவை இடித்து அகற்றப்பட உள்ளது. இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர்கூறியதாவது:-பெரியார் நூலக கட்டுமானபணிக்காக காட்டூர் காவல் நிலையம் இந்த மாத இறுதிக்குள் இடம் மாற்றம் செய்யப்படும்..டவுன் பஸ் நிலையம் அருகே உள்ளசிறைத்துறை பெட்ரோல் வங்கி அருகே75 சென்ட் நிலத்தில் ரூ.30 கோடியில் காட்டூர் காவல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்ட அரசுக்கு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது .புதிய கட்டிடத்தில் சட்டம் – ‘ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து அனைத்து மகளிர் உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகங்கள் அமையும்.அதுவரை காந்திபுரம் பகுதியில் மாநகராட்சி பள்ளி அல்லது விரைவு பஸ் நிலையம் அருகே காட்டூர் போலீஸ் நிலையத்தை தற்காலிகமாக அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் காலியாக உள்ள போலீஸ் பணியிடங்களை நிரப்ப உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. கோவை மாநகரில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .கடந்த ஆண்டில் மாநகரில் 712 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்த ஆண்டில் அதே எண்ணிக்கையில் அனுமதி வழங்கப்படும் புதிய இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. கடந்த முறை பட்டாசு வெடித்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்ட பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விநாயக சதுர்த்தி ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெற அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.