ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்த நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதை அடுத்து மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமேனியின் உயிருக்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெருசலேமில் நேற்று உரையாற்றிய நெதன்யாகு ஈரான் அரசுக்கு எதிரான போர் எதிர்பார்த்ததை விட மிகச் சரியாகச் சென்று கொண்டிருப்பதாகவும் அந்த நாட்டில் நிலவும் கொடுங்கோல் ஆட்சியை அகற்றவே அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
ஈரானில் உள்ள புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் மற்றும் பாசிஜ் படைகள் மீது இஸ்ரேல் பலத்த தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவித்த நெதன்யாகு இனி அவர்கள் தப்பிக்க முடியாது என்று எச்சரித்தார். ஈரான் மக்கள் சுதந்திரத்தை நோக்கிச் செல்வதற்கான தருணம் நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை இஸ்ரேல் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய போரில் இஸ்ரேல் வசம் பல ஆச்சரியங்கள் உள்ளதாகத் தெரிவித்த பிரதமர் நெதன்யாகு அமெரிக்காவுடன் முன்னெப்போதும் இல்லாத வகையிலான ஒரு பலமான கூட்டணியை உருவாக்கி உள்ளதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது தனிப்பட்ட நண்பர் என்றும் தாங்கள் இருவரும் தினமும் ஆலோசனைகளை மேற்கொண்டு இணைந்து முடிவுகளை எடுத்து வருவதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.







